பக்கம்:உலகத்தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினாத்தாள் விடவில்லை

19

“மரக்கறி உணவு வரவில்லே. தகவல் இல்லை போலும்” என்று போய்விட்டார் 'பரிமாறுபவர்'. நான் மரக்கறி உணவினன் என்று தில்லிவரை தகவல் கொடுத்தவர்கள், மேற்கொண்டு ஏனோ கொடுக்கவில்லை, அதுவும் நன்மையாகவே முடிந்தது. டெஹ்ரானிலிருந்து பிராங்க்போர்ட்டிற்கும், பிராங்க்போர்ட்டிலிருந்து ஜினிவாவிற்கும் பட்டினியாகவே பயணம் செய்ததால், செரியாமைக்கு ஆளாகாமல் தப்பினேன்.

டெஹ்ரான்-பிராங்க்போர்ட் பயணம் ஐந்தரை மணிக்குமேல் ஆயிற்று. ஒரே மூச்சில் நீண்ட நேரம் பறக்க வேண்டியதாயிற்று. மனத்தில் சலிப்புத் தட்டிற்று. அப்போது இக் கட்டுரை எழுதத் தொடங்கினேன்.

கிழக்கே இருந்து மேற்கே சென்றால் மணி நேரம் குறைந்து கொண்டே போகும். எங்கெங்கே இறங்குகிறோமோ, அங்கெல்லாம் மணியைப் பார்த்து மாற்றி வைத்துக் கொள்வது உண்டு. ஊருக்கு ஊர் மாற்றாமல் கடைசியாக மாற்றிக்கொள்வோமென்று இருந்து விட்டேன். பிராங்க்போர்ட்டில் இறங்கியபோது என் கைக்கடிகாரத்தில் 7-40 மணி (இரவு). ஆனால் பிராங்க்போர்ட் நேரம் பிற்பகல் 3 மணி. சென்னைக்கும் பிராங்க்போர்ட்டிற்கும் மணி வேற்றுமை 4-மணி 40 நிமிடங்களாகும். மணிக்கணக்கில் நாமே முந்தி மூத்த குடி; கருத்திலும் உழைப்பிலும் கூட முந்தியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/18&oldid=480478" இலிருந்து மீள்விக்கப்பட்டது