பக்கம்:உலகத்தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீழ்ந்தும் எழுந்த ஜெர்மானியர்

27

பேரறிஞர், மருத்துவத்தில் பேரறிஞரான பிறகும் காலை முதல் நள்ளிரவு வரை காட்டுப் பழக்கமுடைய நோயாளிகள் பலரோடு போராட வேண்டியதாக இருந்தும், ஓயாது படித்தார்; எழுதினார். கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான படிப்புப் பெற்றிருந்த அவர் இந்தியத் தத்துவங்களைப் பற்றியும் விரிவாகப் படித்து அறிந்தார்; திருக்குறளையும் அவர் கற்றார். கசடறக் கற்றார், ஏற்கெனவே அவ்வழி நின்றவர்; எனவே, திருக்குறளின் சிறப்பினை உணர்ந்தார். ஒப்பு நோக்கித் திருக்குறளிலும் சிறந்த நூலொன்றைத் தாம் அறிந்ததில்லை எனத் தம் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார். அவர் கற்றதால், அவர் போற்றியதால், அவர் எடை போட்டுக் காட்டியதால், மேனாட்டு மக்களிடையே நம் திருக்குறளின் பெருமை பரவிற்று நாம் யாரும் பரப்ப முடியாத அளவுக்குத் திருக்குறள் அறிமுகமாயிற்று.

பேரறிஞர் சாதனையாளராக இருத்தல் அரிது. வல்லவர் நல்லவராக இருத்தல் அதனிலும் அரிது. பேரறிஞர் சாதனை மேருவாக, நல்லவராக, தூற்றலுக்கும் தொல்லைகளுக்கும் அஞ்சாது நெடுங்காலம் தொண்டாற் றல் அத்தி பூத்தாற்போலாம். ஆனால் பேரறிஞர் காட்டுக்குள்ளே மக்களுக்காகத் தொடர்ந்து ஐம்ப தாண்டுக் காலம் தொண்டாற்றி மறைந்தார். அந்தச் சாதனை மேருவை, சான்றோரை, ஈந்த ஜெர்மனியை வணங்கிற்று என் நெஞ்சம். என் தமிழ்த் திருநாட்டிலும் ஒர் ஆல்பர்ட் சுவைட்சர் தோன்ற அருள்வாய் என்று முணுமுணுத்தது வாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/26&oldid=480552" இலிருந்து மீள்விக்கப்பட்டது