பக்கம்:உலகத்தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

உலகத் தமிழ்


இருவரும் என்னைக் கண்டு, பாரிசிற்கு அழைத்துச் சென்றனர்.

பாரிசில் ‘லத்தின் பகுதி’ என்றழைக்கப்படும் பகுதியில், நெடுஞ்சாலையொன்றில் அமைந்திருக்கும் ஒட்டல் ஆப்சர்வேடாரில் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தனர் தூதரகத்தார்.

அங்குப் பெட்டியைப் போட்டுவிட்டு மாநாடு நடக்கும் இடத்தைப் பார்க்க விரும்பினேன். மாநாட்டு இடமாகிய பிரான்ஸ் கல்லூரி, நான் தங்கியிருந்த ஓட்டலிலிருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரம். பேராசிரியர் காசி என்னை அங்கு அழைத்துக் கொண்டு போனர். புதிய ஊரில் இடம் அடையாளம் கண்டு கொள்ளத் தகுந்தவழி நடந்து செல்வதே. நெடுந்துாரம் இல்லை யாகையால் நடந்தே சென்றோம்.

தொன்மை வாய்ந்த அக் கல்லூரியில் நுழைந்து தமிழ் மாநாட்டு அலுவலகத்திற்குச் சென்றோம்.

“வாருங்கள்; வாருங்கள். எப்போது வந்தீர்கள்?” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். யாருடைய குரல் அது?

பேராசிரியர் தனிநாயகமே அப்படி வரவேற்றார், முன்பெல்லாம் அவரைக் கத்தோலிக்கப் பாதிரியாரின் அங்கியில் கண்டவன் நான். அன்று மற்றவர்களைப் போலச் சாதாரண உடையில் இருந்தார். நொடிப் பொழுது திகைத்துச் சமாளித்துக் கொண்டேன். ஐரோப்பிய நாடுகளில் கிருத்துவப் பாதிரிகளுக்கு இப்போது தனி அங்கி கிடையாதென்று பின்னர் மறைத் திரு. ஞானப்பிரகாசம் அடிகளார் கூறத் தெரிந்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/61&oldid=481012" இலிருந்து மீள்விக்கப்பட்டது