பக்கம்:உலகத்தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

உலகத் தமிழ்


‘சிந்து வெளி எழுத்துக்கள்’ பற்றிய கருத்துரைகளை முதலில் கேட்டோம். அன்றைய கருத்துரைகள் சிந்து வெளிநாகரிகத்தைப் பற்றி அல்ல; சிந்து வெளி எழுத்துகளைப் பற்றியே.

புதையுண்டு கிடந்த ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளைப் பல்லாண்டுகளுக்கு முன், அகழ்ந்து பார்த்து அவற்றின் நாகரிகச் சிறப்பை உலகறியச் செய்தார் மேனாட்டு அறிஞர். அந்நாககரிகம் நம் நாகரிகம் என்றிருந்த தமிழர்களாகிய நாம் திடீரென ஒரடி உயர்ந்து விட்டோம். உரிமையான அப்பெருமிதம் தமிழ் அறிஞர்கள் சிலரையாவது அவ்வாராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபடுத்தும் என்று எதிர்பார்த்தவர்கள் உண்டு. இன்றும் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் உண்டு. அறிஞர் யாரும் தம்முடைய தனி ஊக்கத்தால் மட்டும் செய்துவிடக் கூடியதா தொல்பொருள் ஆராய்ச்சி? அதுவும் பிற நாட்டிற்குச் சென்று நிகழ்த்த வேண்டிய ஆராய்ச்சி? அத்தகைய ஆராய்ச்சிக்கு அரசுகளின் உதவி வேண்டும். உலக அவைகளின் துணை வேண்டும்.

தவத்திரு ஹீராஸ் பாதிரியார் வெளிப்படுத்தியவற்றை வைத்துக்கொண்டு பிறநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மேலும் ஆராய்ந்தனர். சோவியத் ஆராய்ச்சியாளர் இதில் ஈடுபட்டனர். “சிந்து வெளிச் சித்திர எழுத்துகள் திராவிடமொழி எழுத்துகள்” என்ற முடிவிற்கு வந்தனர்.

ஸ்காண்டினேவிய நாடுகளின் ‘ஆசியக் கல்விக் கழகம்’ என்றொரு ஆராய்ச்சி நிலையம் உண்டு. அதன் சார்பில் சிந்துவெளி எழுத்துக்கள் ஆராய்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு. அஸ்போ பர்போலா என்பவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/77&oldid=481168" இலிருந்து மீள்விக்கப்பட்டது