பக்கம்:உலகத்தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

உலகத்தமிழ்

உட்கார்ந்திருந்ததால் பதில் கூறக் கூசினேன். அரசியல் கண்ணோட்டத்தை அலட்சியப்படுத்தலாமா? பின்னர் வெளியே அவரிடம் கூறிய என் பதில், உங்களுக்குமே.

அவர்கள் நோக்கம் எப்படியும் இருக்கட்டும். நாம் விழிப்பாக இருக்கவேண்டும். நாம் முன்னேற வேண்டும்; நெடுந்தூரம் முன்னேற வேண்டும்; விரைவாக முன்னேற வேண்டும். துறைக்கு ஒரு நூல் என்று வெளியிடுவதோடு அக நிறைவு கொள்ளாமல் துறைக்கு நூறு நூல் என்று வெளியிட்டுக் குவிக்கவேண்டும். அவற்றை வாங்கிப் படிக்குமாறு, மக்களுக்குச் சாவி கொடுக்க வேண்டும். இத்தனை ஆக்க வேலைகள் நம் முன்னே நிற்கின்றன. இவற்றை அப்படியே விட்டு விடலாமா? இதிலே முழு மூச்சாக முனைய வேண்டியவர்களை யெல்லாம் பழைய சண்டைக்கு-எதிலிருந்து எது வந்தது? எதிலிருந்து எது, எவ்வளவு, கடன்வாங்கிற்று?” என்கிற சண்டைக்கு-இழுத்து விடலாமா? இழுத்து விட்டால் தமிழின் எதிர்காலம் என்ன ஆவது எல்லோருமே வலுச் சண்டையில் சிக்கிக்கொண்டால் எப்படி? நீங்களும் சிந்தித்துப் பாருங்கள்..

தமிழர் தம் காலில் நிற்கவேண்டும். தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்ய யாரையோ நம்பியிருத்தல் நல்லதன்று. தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உடைய தமிழர் பலர், பல முறைகளிலும் ஈடுபட்டுக்கற்றுத் தேர்ந்து, தமிழ்த் தாத்தாவைப் போல் நம்மிலும் நாலு மேதைகள் சிந்துவெளி நாகரிகத்தையும் எழுத்தையும் ஆராயும் வாய்ப்பும் சூழ்நிலையும் பெற்றிருந்தால், அமெரிக்கப் பேராசிரியரை நம்பிப் பிழைப்பதா, சோவியத் சார்பாளரை நம்பி வாழ்வதா என்ற அவலநிலை வராதே! இப்படி அலைமோதுகிறது என் எண்ணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/83&oldid=481180" இலிருந்து மீள்விக்கப்பட்டது