பக்கம்:உலகத்தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

உலகத் தமிழ்


‘யார் நிரம்பப் படித்தவர் என்று கேட்பதைவிட, யார் நன்றாகப் படித்தவர்’ என்று கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

இவற்றை மாநாட்டின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

பாண்டிய மன்னர், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பினைக் கோடிட்டுக் காட்டுவதையும் காட்டினேன்.

தமிழ் மறையாம் திருக்குறள், கல்விக்கே முதலிடம் கொடுத்திருக்கிறது. கல்விக்குத்தான் நான்கு அதிகாரங்கள்; நாற்பது குறட்பாக்கள். அவையும், சமுதாயப்பாலாகிய பொருட் பாலில் இடம் பெற்றிருப்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பொருட்பாலிலும், இறை மாட்சிக்கு அடுத்து வைத்துள்ள நுட்பத்தையும் உணர வேண்டும்.

கல்வியைப் போற்றும் நல்லோர் மரபில் வந்தவர், தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார். அவர் தமிழ் நாட்டைப் போற்றிப் பாடி மகிழும் போதும்,

கல்வி சிறந்த தமிழ் நாடு- புகழ்க்
      கம்பன் பிறந்த தமிழ்நாடு
பல்வித மாயின சாத்திரத் தின் மணம்
      பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

என்றே பூரிக்கிறார். இது, அவருக்குக் கல்வி, கவிதை, பல்கலை ஆகியவற்றின்பால் இருந்த பேரார்வத்தைக் காட்டுகிறது.

கல்வி பற்றிப் பாரதியின் கருத்தென்ன?

பன்னருங் கல்வியாக இருக்க வேண்டும், ஏன்?

படிப்பவர் பல வகையினர். எனவே பலவகையாக அமைய வேண்டும். கல்வி வழுக்கையாக இருக்கலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/95&oldid=481246" இலிருந்து மீள்விக்கப்பட்டது