பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1. ரகசியம்தான் என்ன?

அகன்று பரந்து கிடக்கின்றது வானம். ‘தக தக’ என்று ஒளி வீசுகிறது ஞாயிறு. பால் போல் நிலவு பொழிகின்றது தண் மதி. வைரக் கற்களை அள்ளித் தெளித்தாற் போல மின்னுகின்றன நட்சத்திரங்கள்.

நில மடந்தைக்கு நீலச் சிற்றாடை உடுத்தியது போலக் கண்ணைக் கவர்கிறது கடல்!

இவற்றின் ரகசியம் என்ன? மலைகள் ஆகா! என்ன கம்பீரம்! என்ன கம்பீரம்! வானளாவத் தோன்றுகின்றன மலைச் சிகரங்கள்.

மரகதம் விரித்தது போன்ற புல் தரைகள் ஆகா! என்ன அழகு என்ன அழகு! இவற்றின் ரகசியம் என்ன?

செடிகள்! கொடிகள்! மரங்கள் எத்தனை நிறம்? எத்தனை நிறம்? இந்த நிறங்கள் இவற்றிற்கு எப்படி ஏற்பட்டன? ஏன் ஏற்பட்டன?

இலைகள் உதிர்கின்றனவே! ஏன்? தளிர் விடுகின்றனவே! ஏன்? என்ன விந்தை! என்ன விந்தை!