பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தங்கம் இருக்கிறது. அதைக் கொண்டு மிக அழகான சங்கிலி பண்ணுகிறான் நகை வியாபாரி. மோதிரம் செய்கிறான். தோடு அமைக்கிறான். வளையல் செய்கிறான். இவை எல்லாம் வேறு வேறு பொருள்களாகக் காட்சி தருகின்றன.

அவ்விதம் காட்சியளித்தாலும் அடிப்படை எது? தங்கம்! தங்கம் அன்றோ!

இதேபோல, மனிதன், நாய், மீன், மரம் இவை எல்லாம் புறத் தோற்றத்தில் வேறு வேறாகக் காட்சியளித்த போதிலும் அடிப்படை ஒன்றே என்கிறது அறிவியல். அடிப்படை என்ன? ஸெல். ஸெல் என்றால் அறை என்று பொருள்; சிறு அறை. தேன்கூடு அல்லது தேனடை என்று சொல்கிறோமே! அஃது எல்லாரும் அறிந்த ஒன்றே. ஈயை விரட்டி விட்டுத் தேனையும் எடுத்தபின் பார்த்தால் என்ன தெரியும்?

சிறு சிறு அறைகள் தெரியும். ஏராளமாகத் தெரியும். இந்த அறைகளுக்குத்தான் ‘ஸெல்' என்று பெயர்.

இங்கிலாந்து நாட்டிலே ஓர் அறிஞர் இருந்தார். அவர் பெயர் ராபர்ட் ஹூக் என்பது.