பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

புரட்சி செய்த பேனா வீரர்கள்

மேல் வழக்குத் தொடுத்து இவனையே சிறைக்கணுப்பிவிட்டனர். டிரைபஸ் டெவில்ஸ் தீவிலும், ஜோலா மத்திய சிறையிலும் வைக்கப்பட்டனர்.

ஜோலா விடுதலையடைந்து வெளிவந்தவுடன், மீண்டும் எழுத்துப்போர் தொடுத்து, வழக்கை இராணுவ நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்து, டிரைபஸ் குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுதலை பெற்றுத்தந்தான். டெவில்ஸ் தீவிலிருந்து டிரைபசை பிரான்சுக்குக் கொண்டு வந்து, எந்தத் திடலில் அவனைக் குற்றவாளி என்று பறைசாற்றி அவனது உடுப்புக்களைக் களைந்து உடைவாளை உடைத்தெறிந்தார்களோ, அதே திடலில் நிறுத்தி இராணுவ உடைகளை அணிவித்து உடைவாளைத் தந்தனர்.

இந்த கோலாகலங்களிலெல்லாம் டிரைபசின் மனம் செல்லவில்லை. எந்த உத்தமன் நம் விடுதலைக்காகப் பாடுபட்டான்? யார் அந்த பொதுநலவாதி? எங்கிருக்கின்றான்? அவனை நேரில் கண்டு, தன் நெஞ்சு நிறைந்த நன்றியைச் சொன்னாலன்றி மனம் ஆறுதலடையாது என்று, ஜோலாவின் இருப்பிடத்தைத் தெரிந்துக் கொண்டு ஓடோடி வருகின்றான்.

அந்தோ! எழுத்து வேந்தன் எமிலிஜோலா பிணமாகக் கிடக்கிறான். பக்கத்தில் பேரறிஞன் அனதோல்பிரான்சு ஈமச் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருக்கிறார். கால வெள்ளத்தாலும் அந்த எழுத்து வேந்தன் திருநாமத்தை அழிக்க முடியாமல் அவன் என்றும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றான்.

அழுதழுது புலம்பினான் ஆராத்துயரடைந்தான். “தலை போகுமே என்ற கவலையில்லாமல் எனக்காக வாதாடிய எழுத்து வேந்தனே” என்று எமிலி ஜோலாவைத் தன் கண்ணீரால் கழுவினான். எனினும், நேற்றிருந்தான் ஜோலா, இன்றில்லை அவன் - என்று காலம் சொல்லிற்று.