பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

127

தொடங்கிய காலத்திலிருந்து சீனர்கள் ஆளப்படும் வகுப்பினர் என்ற அடையாளத்தைக் குறிக்க தலையின் முன்பக்கத்தை கொஞ்சம் சிரைத்துக்கொண்டு பின்பக்கம் நீண்ட பின்னலைப் பின்னி தொங்கவிடப்படவேண்டுமென கட்டளையிட்டிருந்தார்கள். மஞ்சு சர்க்காரை வீழ்த்துவதில் தாங்கள் வெற்றி பெற்றால், அதன் அறிகுறியாக பின்னலை வெட்டிவிடுவதற்காக கத்திரிக்கோல் வாங்கிருந்தார்கள். இப்படி வாங்கிய சில பொருட்களை ஹாங்காங் கிளைச் சங்கத்தினர் சில பீப்பாய்களில் அடைத்து கப்பல் மூலம் காண்டன் நகரத்துக்கு அனுப்பினார்கள். பீப்பாய்களின் மேலே சிமெண்டு என்று எழுதினார்கள்.

காண்டனில் இந்த பீப்பாய்களை இறக்கும்போது ஒரு பீப்பாய் விழுந்து வெடித்தது. விடுவார்களா அதிகாரிகள்? ஹாங்காங்கில்தான் இந்த சதி நடைபெறுகிறது என்று அறிந்து ஓடி வந்தார்கள். செய்தியறிந்ததும் சன்னை வெளியேற்றிவிட்டார்கள். மற்ற நால்வரும் அகப்பட்டுக்கொண்டார்கள். இப்போது மஞ்சு அரசாங்கத்தில் ஒரு சட்டம் இருந்தது. குற்றவாளிகள் அகப்படாவிட்டால் அவர்கள் தாய்தந்தையர்களை, உற்றாரைப் பிடித்து சிறையிலடைத்து சித்திரவதை செய்வது, அல்லது சிரச்சேதம் செய்வது. அதனால், பெற்றோர்கள் ஹனலூலுவுக்கு ஓடிவிட்டார்கள். சன்னின் பெரிய தந்தை அகப்பட்டுக்கொண்டான். இவனை காண்டனுக்கு அழைத்துப் போய் சிறையில் தள்ளிவிட்டார்கள். மஞ்சு சர்க்கார் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆறாயிரம் பவுன் லஞ்சம் கொடுத்து விடுதலை பெற்றார்கள். அவர்களில் ஒருவன் சிறைக் கொடுமை தாளமுடியாமல் சிறையிலே இறந்துவிட்டான்.

சன்னின் கதி என்ன?

சன் முதலில் காண்டன் நகரத்திற்கு ஓடினான். பிறகு, மாக்கோ தீவுக்கு ஓடினான். “அங்கே சன் தலையைக் கொண்டு வந்தால் பத்தாயிரம் பவுன் வெகுமதி”-இப்படி சுவரொட்டி