உத்தமர்கள்
133
போல், அடிக்கடி சென்று வந்தான். என்றாலும் இவன் உயிர் மயிரிழையில் தப்பிக்கொண்டேயிருந்தது. இறுதியாக ஹவாய் தீவில் தன் குடும்பத்தோடு, ஆறு மாதங்கள் தங்கி அங்கும் ஹனலூலுவிலும் பல சொற்பொழிவுகளை ஆற்றித் துண்டு அறிக்கைகளையும் வெளியிட்டான். அது அமெரிக்கர் வசம் அப்போதிருந்ததால் தன்னை ஒரு அமெரிக்கக் குடிமகன் என்பதற்கான அத்தாட்சிப் பத்திரத்தை ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தான். அது பல நேரங்களில் வசதியாயிருந்தது.
இவன் ஆற்றிய உருக்கமான சொற்பொழிவு
ஹனலூலுவில் உள்ள ஓர் நாடக அரங்கில் சீன மொழியில் ஒரு உணர்ச்சி மிக்க சொற்பொழிவாற்றினான். அதை ஆங்கிலப் படுத்தி Honololu Advertiser என்ற செய்தித்தாள் அருமையான தலைப்பு கொடுத்து வெளியிட்டது. அதன் சுருக்கம் கீழே தரப்படுகிறது.
“மஞ்சுக்களல்லாத சீனர்களிடையே நாம் தேசிய உணர்ச்சியை வளர்க்க வேண்டும். அதைச் செய்வதை என் ஆயுட்காலப் பணியாகக் கொண்டிருக்கிறேன். அதை நாம் செய்தோமானால் நாற்பது கோடி மக்களும் ஒருமுகமாக எழுந்து மஞ்சு அரசாங்கத்தை ஒழித்து விடுவர்.
இங்போது சீனர்களாகிய நாம் நாடில்லாத மனிதர்கள் போல் இருக்கிறோம். வெளியிலுள்ளவர்கள் யாராவது நம்மைத் தாக்கினால் அரசாங்கம் கவலைப்படுவதே இல்லை. நீங்கள் ஏன் தலைமயிரைப் பின்னல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா? மஞ்சு ஆதிக்கத்துக்குட்பட்டவர்கள் என்பதைக் காட்டததான். சீனாவில் நீங்கள் இப்படி பின்னல் போட்டுக்கொள்ள மறுத்தீர்களானால் உடனே சிரச்சேதம் செய்யப்படுவீர்கள்.”
இப்படி உணர்ச்சி மிகுந்த சொற்பொழிவாற்றினான். பலரை காந்தம் போல் இழுத்தது இந்தச் சொற்பொழிவு. இதைக் கேட்ட பலர் பணமும் ஆதரவும் தர முன் வந்தனர்.