பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

உலகைத் திருத்திய


ஜெகத்தை சிந்தனைக்கூடமாக எண்ணிய இவன் மேல் ‘சீரழிக்க வந்தவன்’ கிரேக்கர்கள் தொழுதுவரும் கடவுள்களைப் பொய்யென்று தூற்றி, தான் ஒரு புதுக் கடவுளை உண்டாக்குகிறான். இளைஞர்களைக் கெடுத்துவிடுகிறான், என்ற தன் குற்றச்சாட்டை மெலிடஸ் என்பவன் பின்வருமாறு படிக்கிறான் நீதிமன்றத்தில்;

குற்றச்சாட்டு

“பித்தஸ்பேட்டையில் இருக்கும் மெலிடஸ் என்பவரின் மகன் (மெலிடஸ்) என்பவன், அலோபேக் பேட்டையில் வசிக்கும், காலஞ்சென்ற சோப்ரோனிஸ்கஸ் மகன் சாக்ரடீஸ் மீது பின்வருமாறு குற்றஞ்சாட்டுகிறேன்.

ஏதென்ஸ் நாட்டு மக்களும் அரசாங்கமும் எந்தக் கடவுளர்களைத் தொழுகிறார்களோ, அந்தக் கடவுளர்களைத் தொழுவதில்லை. அதற்குப் பதிலாக இவன், இதற்கு முன்பில்லாத புதிய கடவுள்களைப் புகுத்துகிறான். வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றான், சந்திரனை மண் என்றும், சூரியனைக் கல்லென்றும் சொல்கிறான். புதிய மதக்கோட்பாடுகளைப் புகுத்துகிறான். சாக்ரடீஸ் மிகவும் தீயவன். கடவுளால் விவரிக்கப்படாத மறைபொருள்களைத் துருவியறிவது இவனுக்கு எப்போதும் பொழுதுபோக்காக உள்ளது. இவன் கெட்டதை நல்லதைப்போல் நாட்டவல்லவன், நல்லதைக் கெட்டதைப் போல் நாட்டவல்லவன். மற்றும், இளைஞர்களைத் தன்பேச்சின் வன்மையால் கெடுத்து விடுகிறேன். ஆதலின் மெலிடஸ் என்ற வாதியாகிய நான் இவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று நீதிமன்றத்தை வேண்டிக்கொள்ளுகிறேன்.

இப்படிக்கு,

மெ. மெலிடஸ்

பித்தஸ்பேட்டை, ஏதென்ஸ்,