பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

145

குற்றம் சுமத்தியிருக்கிற எதிரிகளே கூட அதற்குக் கட்டுப் பட்டவர்களல்ல. ஏனென்றால் பொய்க்குற்றம் நிரூபிக்கப்பட்டு, நான் அடையப் போகும் தண்டனையைப் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்று நாக்கில் நீர் ஊறிக்கொண்டிருக்கும் அவர்களை ஏன் துக்கத்தில் துணை சேர்க்க வேண்டும் என்பதினால்தான்!

நண்பர்கள், சுற்றத்தார், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், உள்நாட்டார், அயல்நாட்டார், அரசாங்க ஊழியர்கள், அல்லாதவர்கள், என்ற பாகுபாடில்லாமல் நியாயத்தை வழங்க வாள்முனையில் உறுதிசெய்துகொண்ட உத்தமர்களாகிய உங்கள் முன்னிலையில் நிற்கிறேன், குற்றவாளி என்ற பேரால்!

ஒரு மனிதன் தான் அடைந்திருக்கும் வயோதிகத்துக்காகக் கவலைப்படக் கூடாது. வயதானதால் இறந்துவிடுவோம் என்ற எண்ணம் வந்துவிடுவதால் அச்சம் பலருக்கு ஏற்படுகிறது. இளமையில் கற்ற தத்துவம், கெட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் மறு உலகத்தில் ஆண்டவனால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தத்துவம் நினைவுக்கு வருகிறது. தூங்கிக்கொண்டிருக்கிற குழந்தை பயத்தினால் விழித்துக்கொள்வதைப்போல தன் பழைய காரியங்களைப் பற்றி நினைத்துக்கொண்டு, என்ன தண்டனை கிடைக்குமோ என்று பயப்படுகிறான். எவன் ஒருவன் தன் மனப்பூர்வமாக யாருக்கும் எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை என்று உணர்கிறானோ அவன் வயோதிக காலத்தில் நம்பிக்கையோடு வாழ்கிறான். இந்த நம்பிக்கைதான் தள்ளாத வயதில் தாதி போல இருந்து உதவுகிறது.

நெறியுடையோனை, தூயவாழ்வினனை, நம்பிக்கை எனும் மாதேவியே நடத்திச் செல்கிறாள். வயோதிகத்தில் தாதியாய், வழிநடையில் துணைவியாய் இருக்குமவள். அலையுறும் ஆத்மாவுக்கு ஆறுதலளிக்கின்றாள்” என்று கூறிய பிண்டார் என்ற நமது கவிஞன் வார்த்தைகளை இங்கே நினைவுபடுத்துகிறேன். ஆகவே நான் எவ்வித அபாயங்களுக்கும் அநியாயங்களுக்கும் சோர்ந்துவிடுவதில்லை.