பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

15


வர்த்தமானர் தன் வைராக்கிய சித்தத்தால், பொறுமை குணத்தால், உற்ற நோய் பொறுத்து, உயிர்க்கு ஊறு செய்யாத தவத்தால் பல பெரும் சோதனைகளைக் கடந்து, ஐம்புலன்களையும் வென்று வாகைசூடியதால் ‘மகா வீரர்’ என்ற பெயர் பெற்றார்.

ஆண்களும் பெண்களும் அவருடைய கொள்கையைத் தழுவி ஒழுகினார்கள். ஜைன துறவிகளுக்கான நியதிகளில் விசித்திரமானது ‘திகம்பர நிலை’ என்ற நிர்வாணகோலத்தோடு உலவுவது. எந்த உடைமையிலும் அவா பிறக்காமல் இருப்பதற்காக இம்முறை கடைபிடிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

புத்தம், ஜைனம் ஆகிய இரண்டிற்கும் அதிக வேறுபாடில்லையாயினும், புத்தமதம் மீண்டும் பிறவாமைக்கு வழி சொல்வதாகவும், ஜைனம் இந்த வாழ்வையே குறைத்துக் கொண்டு விடுதலை பெறவேண்டுமென்று கூறுவதாகவும் இருக்கின்றன. ஒருவன் ஆசையை-ஐம்புலன்களின் வேட்கையை அவித்து மதக் கட்டுப்பாட்டுடன் ஒழுக இயலாவிட்டால் தற்கொலை செய்துகொண்டு வாழ்வை முடித்துக்கொள்ள ஜைன மதம் அனுமதிக்கிறது.

ஜைன் மதத்தின் அடிப்படைக் கொள்கைகள்:

1. அகிம்சை- ‘அகிம்சா பரமோ தர்ம’-இன்னு செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல்.

2. வாய்மை-சத்தியம், பொய்யாமை, தீமை பயக்கும் சொற்களைச் சொல்லாமை.

3. கள்ளாமை (திருடாதிருத்தல்), எந்த அற்பமான பொருளாக இருந்தாலும் அதற்குரியவர் கொடுத்தாலன்றி எடுத்துக் கொள்ள மனதாலும் நினையாதிருப்பது.

4. பிரமசரியம்-அதாவது புணர்ச்சி விழையாமை, சிற்றின்பத்தை, மனம் வாக்கு காயங்களால் செய்யாதிருத்தல். (சிலர் சதிபதிகள் ஒழுங்கு மீறாமல் நேர்மையுடன் வாழ்தல் என்றும் கூறுகிறார்கள்)