பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

உலக

எண்ணங்களையும், சொல் செயல் ஆகியவற்றைப் பொசுக்கக் கற்றேன். நீரிடமிருந்து அது சளைக்காமல் மெல்ல மெல்லக் கல்லையும் கரைத்துவிடுவது போல், விடா முயற்சியினால் பழையவினையை அற்றுப் போகும்படி செய்யத் தெரிந்து கொண்டேன். தன்னடியில் என்ன மாறுதல் ஏற்பட்டாலும் நிலையாக விளங்கும் ஆகாயத்திலிருந்து உலகம் மாறினாலும் கொண்ட கொள்கையை விடாமல் கடைப்பிடிக்கக் கற்றுக் கொண்டேன். சூரியனிடமிருந்து தீமைக்குப் பதில் நன்மை புரியவும், எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் தன்மையை உணர்ந்தேன். கடல் நீரை உறிஞ்சி மழை நீராகத் தரும் சூரியனின் தன்மை அதுவே. சந்திரன் தேய்ந்து வளர்ந்து கிரகணத்தில் மறைவதிலிருந்து செல்வம் வருவதையும் போவதையும், அவ்வப்போது வரும் இன்னல்களையும் பொருட்படுத்தாத தன்மையை அறிந்தேன். மேகத்திடமிருந்து கபடில்லாமல் மழை பொழிவதுபோல் தாராள மனத்தோடு இருக்கக் கற்றேன். நல்ல பாம்பிடமிருந்து சொந்த வீடு வாசல் இல்லாமல் எந்த இடம் கிடைத்தாலும் இருக்கப் பழகிக் கொண்டேன். மலைப் பாம்பிடமிருந்து உணவைத் தேடி அலையாமல் தானாகக் கைக்குக் கிடைத்ததைக் கொண்டு வாழத் தெரிந்துகொண்டேன். புறாவிடமிருந்து அதிகமாகப் பாசம் வைத்தால் சம்சார வலைக்குள்தான் சிக்குவோம் ஆகவே அது கூடாது என்று தெரிந்துகொண்டேன். தண்ணீர் வற்றுவதைப் பற்றியோ வெளிநீர் வந்து நிரம்புவதைப் பற்றியோ கவலைப்படாத கடலிலிருந்தும் எதையும் பாராட்டாமல் இருக்கக் கற்றேன். லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் போய்க்கொண்டேயிருக்கத்தான் வேண்டுமென்பதை நிற்காமல் ஓடிப்பாயும் ஆற்றிடம் தெரிந்துகொண்டேன். கானல் நீரிடமிருந்து வாழ்வு பொய்யானது என்பதையும், புல் பூண்டு வளர்ந்து அழிவதைப் பார்த்து வாழ்வு நிலையற்றது என்பதையும் அறிந்தேன். தன்னை வெட்டுபவனுக்கு நிழல் கொடுத்து உதவும் மரத்தைப் போல தன்னை வெட்ட உபயோகிக்கும் கோடலிக்குக் காம்பாகவும் உதவும் மரத்தைப் போல பெருந்தன்மையுடன் இருக்கத் தெரிந்துகொண்டேன்.”