பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

உலக

மனதைத் திருப்பலாம் என்ற முடிவில் யசோதா என்ற அழகிய பெண்ணை அவனுக்கு மனைவியாக்கினான். நாளடைவில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்து, அவனுக்கு இராகுலன் அல்லது சோகமற்றவன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். ஆனால் சித்தார்த்தனின் அறிவுப் பசி அடங்கவில்லை.

முழு நிலவு நாள். அரண்மனையின் அந்தபுர மண்டபம். அம்சதுளிகா மஞ்சத்தில் பொன்மஞ்சத்தில் பொன்மலர்ப் பொலிவுடன் யசோதா துயில்கிறாள். அவள் அருகிலே குழந்தை இராகுலன். உலகை மறந்து ஆனந்த நித்திரை செய்யும் அவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்தான் சித்தார்த்தன். ஆசையை அடக்கிய தவசீலர்களையும் தடுமாறச் செய்யும் அழகுப் பொலிவு, மனதை வென்ற மகான்களையும் மயங்கி விழச் செய்த புத்திர பாசம். ஒருமுறை, மலர்ச் செண்டாகத் தவழும் இராகுலனை கையிலேந்தி உச்சி மோந்து அணைத்து மகிழத் தூண்டியது மனம். பிள்ளை பாசம் விருவரூபமெடுத்துத் தன் முயற்சியை மூடி மறைத்துவிடுமோ என்று அஞ்சி விருட்டென்று வெளியேறினான். இளகிய மனம் இரும்பானது.

துன்பச் சாயலே படியாத இன்பப் போகங்களிலே வளைய வந்த அரச குமாரன், சுக சல்லாப கேளிக்கைகளின் நடுவே சிரித்து வளர்ந்த இளவரசன், செல்வச் செழிப்பிலே தவழ்ந்த உலகாளும் நாயகன், ஆடம்பரம், அரண்மனைவாசம், ஆள்-தேர்ப்-புரவி-அதிகாரம், அத்தனையும் விட அழகு மனைவி, அருமைக் குழந்தை எல்லாவற்றையும் துச்சமென மதித்து வெளியேறுகிறான்.

விரித்த உலகம் தன் இரு கரங்களால் அவனை வரவேற்கிறது. “கண்டகம்” என்ற தன் வெள்ளை நிறக் குதிரையிலேறி தட்டிவிட்டான். அறிவுப் பசிக்கு இறை தேடப் புறப்பட்டு விட்டான் சித்தார்த்தன். மனிதத் துயரங்களுக்கு முடிவு காணக் கிளம்பிவிட்டது அந்த இளஞ்சிங்கம். உலகிற்குப் புத்தொளியைப் பரப்ப உதித்துவிட்டது. பெளத்த சூரியன்.*


  • மைத்திருள் கூர்ந்த மனமாசுதீரப் புத்த ஞாயிறு தோன்றும் காலை... (மணிமேகலை)