உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

மதங்கள்


பசியறியாத அரசகோமான் கையிலே ஓடேந்தி தன் நாட்டு நகரவீதிகளிலே உணவுக்காக அலைந்தான்.

தத்துவ ஆராய்ச்சியின் மூலம் உண்மையை அறியலாம் என்று முதலில் சித்தார்த்தன் முயன்றான். ஊனினை உருக்கி, உடலை வருத்திக்கொண்டால் உள்ளம் உயரும் என்ற நம்பிக்கையில், தன்னையே தான் வருத்திக் கொண்டு வாடினான். உணவு உறக்கமின்றி உடல் மெலிந்து மயக்கமடைந்தான். ஓர் ஆயர்குலப் பெண் கொடுத்த பாலினால் மீண்டும் உயிர்த் தெழுந்த சித்தார்த்தன், உடலை வளர்ப்பதே உயிரை வளர்ப்பதாகும் என்ற முடிவுக்கு வந்தான். மீண்டும் மீண்டும் அறிவு வேட்கைக்கு ஆளாகித் திரிந்த சித்தார்த்தன், உண்மையைக் காணாமல், இருந்த இடத்தைவிட்டு நகருவதில்லை என்ற வைராக்கியத்தோடு, போதி மரத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தான். ஏழு வாரங்கள் அந்த நிலையிலேயே கழிந்தன.

கி.மு.544ல் வைகாசித் திங்கள், பூர்ண நிலவு நாளில் உண்மை ஒளி மின்னலைப்போல் அவன் சிந்தனையில் தோன்றியது. உலகம் ஒரு ஞானியைப் பெற்றது. அவன் அமர்ந்திருந்த இடத்தை “அறிவின் பீடம்” என்று வரலாறு அழைக்கிறது.

உலகத் துயரங்களுக்கு விடிவைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் சித்தார்த்தன் மூழ்கினான். சித்தார்த்தன் அன்றிலிருந்து ‘புத்தன்’ என்ற பெயர் பெற்றான். புத்தன் என்றால், அறிஞன் அல்லது ஒளிபெற்றவன் என்ற பொருள்படும்.

“ஓ! உலகமே! உண்மையைக் கண்டுகொண்டேன். துயரங்களுக்குக் காரணம் மனித ஆசைதான்; அதை அகற்றுங்கள்” என்று அறைகூவல் விடுத்தான்.

“மனிதர்கள் தாங்கள் செய்யும் தீய செயல்களின் விளைவுகள், தங்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதை உணர்ந்தால் எப்போதும் தீயதை நினைக்கவே மாட்டார்கள்.” என்பது