பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

உலகு

புத்தரின் முதல் உபதேசம். “இன்பத்தைத் தேடி அலைகிறார்கள். அதனால் துன்ப வலையில் சிக்கித் தவிக்கிறார்கள்.”

‘மனிதனின் துயரங்களைப் போக்குவேன்’ என்ற முழக்கத்தோடு புறப்படுகிறது புத்தநாதம். காசி நகருக்கு சில மைல் தொலைவில் உள்ள சாரநாத் என்ற ஊரில், முதலில் ஐந்து சீடர்களை அழைத்து, தான் அறிந்த உண்மைகளைப் புத்தர் போதித்தார். பிறகு கெளதமர் ஊர் ஊராக, நகரம் நகரமாக, நாடு நாடாகச் சுற்றி உலக போதகனாக உலவத் தொடங்கினான். 60க்கும் மேற்பட்ட சீடர்களை உலகின் பல பாகங்களுக்கும் தன் தத்துவ தூதர்களாக அனுப்பினான்.

வகுப்பு, இனம், சாதி, சமயம் என்ற பேதங்களைக் கொண்ட வர்ணாஸ்ரம தர்மம் நிலைபெற்றிருந்த அக்கால இந்தியாவில், பிறப்பால் எல்லோரும் சமமே என்ற புத்தரின் தத்துவம் இந்து மதத்திற்கு புரட்சிகரமான எதிர்ச் சவாலாகக் கிளம்பியது.

அரசர்கள், பிரபுக்கள், பிராமணர்கள், பெரு வணிகர்கள், தொழிலாளிகள், தீண்டத்தகாதவர்ளென ஒதுக்கிவைக்கப்பட்ட குடிமக்கள் அனைவரும், புத்தன் ஒலித்த தர்ம பேரிகையின் ஒலியில் கட்டுண்டு பிட்சுக்களாக மாறினர்.

புத்தன் தன் கடைசி மூச்சுவரையிலே உலக உய்வுக்காகப் போதித்தான். தன் இறுதி நாள் நெருங்குவதைக் கண்டதும் அண்டியிருந்த சீடர்களை அழைத்து “பிட்சுக்களே, உங்களுக்கு நான் அறிவித்த தத்துவங்களில் ஐயம் இருந்தால், இப்போதே கேட்டுத் தெளிவு பெறுங்கள். என் உயிர் பிரிந்ததும் எதையும் கேட்காமல் விட்டோமே என்ற குறையில்லாமல் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆத்ம விடுதலைக்குப் பிறரை நம்பியிருக்காதீர்கள். உங்கள் அறிவாலும் உழைப்பாலும் முயலுங்கள். நீங்கள்தான் உங்கள் விடுதலைக்குக் காரணமாவீர்கள்.” என்றார்.