33
மதங்கள்
நிலைத்திருப்பதற்கான சக்தியைப் பெற்றிருக்கும் பொருள் எதுவுமே காண முடியாது.
உலகப் பொருள்கள் யாவும் உரு மாறி அழியக் கூடியது தான். நிலையாமையை உணர்த்த ‘கோதமி’ என்ற பெண்ணுக்கு புத்தர் செய்த உத்தியை கதையாகக் கூறுவர். தன் மகனை இழந்து துக்கித்த கோதமி என்ற பெண், புத்தரை தெய்வம் என்று எண்ணி, தன் மகனை மீண்டும் உயிர்பெற்றெழும்படிச் செய்ய வேண்டினாள். நிலையாமைத் தத்துவத்தை அறியாத அப் பெண்ணிடம் புத்தர், “ஏ பெண்ணே, உன் மகனுக்கு உயிர் தருகிறேன். நீ போய் எவருமே இறக்காத ஒரு வீட்டு குடும்பத்தில் ஒரு பிடி கடுகு வாங்கி வா” என்றார். அந்தப் பேதைப் பெண்ணும் ஊர் முழுதும் சுற்றினாள், இறந்த மகன் பிழைப்பான் என்ற நினைப்பில். “என்னடி நினைத்துக்கொண்டாய், இந்த உலகில் உயிரோடு இருப்பவர்களைவிட இறந்தவர்கள் தான் அதிகம் பேர். எங்கள் வீட்டிலும் அனேகம்பேர் இறந்து விட்டார்கள்” என்ற பதில்தான் கிடைத்ததே தவிர ஒரு பிடி கடுகு புத்தர் சொன்னபடி கிடைக்காமல் திரும்பினாள். அந்த நிகழ்ச்சி மூலமாக, புத்தர் பாமர மக்களுக்கு நிலையாமையை விளக்கியதாகக் கதை உண்டு. உலகில் தோன்றிய எந்தப் பொருளும் நிலையானதல்ல என்ற உண்மையோடு கூட, அந்தப் பொருள்களின் மீது வைக்கப்படும் பற்று, அந்தப் பொருள் அழியும்போது துன்பத்தைத் தருவதாக மாறிவிடுகிறது.
தீயவை எவை? களவு, காமம், பொய்மை, தூற்றுதல், கேடு செய்தல், தற்புகழ்ச்சி, பகை, வெறுப்பு, தவறான கொள்கையில் பிடிப்பு இவையாவும் தீயவைகளே.
நம்மை எரிக்கும் தீ எது? காமத்தீ, பகைமைத் தீ, முதுமைத் தீ, இறப்புத்தீ, துக்கத் தீ, ஏமாற்றத் தீ, கவலைத் தீ, ஏக்கத் தீ. இவற்றை அழிக்காவிட்டால் ஒன்றிலிருந்து ஒன்று பற்றிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறப்பினைத் தந்து லெளகிக விடுதலை கிடைக்காமல் செய்துவிடும்.