உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

61


யூத மதம், சடங்குகள் நிறைந்ததாகவும் ஆத்மிக வலிமை குறைந்தது என்றும் ஒரு சாரார் கூறுவர். அப்படிச் சொல்வதற்கில்லை. அக்கால தீர்க்கதரிசிகள் சம்பிரதாய, சடங்குகளை அறவே வெறுத்தனர். தீர்க்கதரிசி ஐசய்யா பேசுகிறார்: “நான் இரக்கத்தைத்தான் விரும்புகிறேன், கடவுள் பெயரால் பலியிடுவதை அல்ல. கடவுளே கேட்கிறார். எதற்காக இப்படி பலியிடுகிறீர்கள்? எனக்குக் கொழுத்த விலங்குகளிலிருந்து ஆகாரம் கிடைக்கிறது. எருதுகளின் இரத்தமோ, ஆட்டுக்குட்டிகளின் சதையோ எனக்கு விருப்பமானதல்ல. உங்களைக் கழுவுங்கள், கரங்களைத் தூய்மை படுத்திக்கொள்ளுங்கள். என் கண்முன்னே இந்தக் கொடுமையைச் செய்யாதீர்கள். நியாயத்தைத் தேடுங்கள், ஒடுக்கப்பட்டவர்களை மீளுங்கள். தாய் தந்தையற்றவர்களை ஆதரியுங்கள். விதவைக்காக வாதிடுங்கள்.”

யூதர்கள் வாழ்க்கையில் சடங்குகள் அதிகமாகக் காணப்பட்டாலும் பைபிளில் கூறப்பட்ட ஓய்வு நாள், திருவிழாக்கள், கணக்கற்ற பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் யாவும் மதத்தை வெளிவுப்படுத்தும் புறச் சின்னங்களாக கருதப்பட வேண்டியவையாகும். ஓய்வு நாள் என்பது ‘சாபத்’ என்கிறார்கள். புகழோடு வாழ்ந்த பெரிய மனிதர்களின் நினைவாகக் கொண்டாடப்படும் நாட்கள் திருவிழாக்களாகின்றன. நினைவு நாள் அல்லது புத்தாண்டு தினம் என்பது கழிந்த ஆண்டின் செய்கைகளை நினைவு கூறவும் புத்தாண்டுத் திட்டங்களை வகுக்கவும் கொண்டாடப்படுவதாகும். மன்னிப்புத் தேடும் நாள் என்பது, தான் செய்த தீய காரியங்களை எண்ணி பட்டினி கிடத்தலும் கடவுளை நினைத்து பிரார்த்திப்பதுமாகும்.

தீர்க்கதரிசிகள் அடிக்கடி சொன்னதைப்போல, ‘சடங்கு சம்பிரதாய ஒழுங்குகள் மக்களை ஒன்றுசேர்க்கவும் தேசத்தை ஒன்றுபடுத்தவும் ஏற்படுத்தப்பட்டதே’ என்பது யூதர்களின் மத நம்பிக்கையாகும்.