பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

75

கொண்டிருந்தார். மதகுருக்கள் வந்தனர். தான் செய்த நடிகை தொழிலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டாலன்றி மதச் சடங்குகளோ, கல்லறையில் இடமோ கொடுக்க முடியாது என்று பயமுறுத்தினர். என்றாலும் அவள், “என்னை ஆளாக்கி, பெரும் பணமும் சம்பாதித்துக் கொடுத்த அந்தத் தொழிலுக்காக மன்னிப்புக் கேட்கமுடியாது” என்று மறுத்துவிட்டாள். இறந்தும் போய்விட்டாள். உறவினர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது, போலீஸ் புகுந்து தடியாலடித்து எல்லோரையும் விரட்டிவிட்டு பிணத்தை ஒரு குப்பை மேட்டில் போட்டு, சுண்ணாம்புத் தண்ணீரை கொதிக்கக் கொதிக்க அந்த சடலத்தின் மேல் ஊற்றி அது பஞ்சு பஞ்சாகப் போகுமளவுக்குத் தடியால் அடித்துவிட்டுப் போய்விட்டனர்.

இதைக் கண்ட பிறகுதான் வால்டேர், இனி மதக் கொடுமைகளை ஒழித்தாலன்றி சமுதாயம் தன்மானத்தோடு வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தார். அவர் எழுதிய நாடகங்கள் நடிக்கத் தொடங்கிய இரண்டொரு நாட்களிலேயே தடை போடப்படும். காரணம், முன்பு அந்த நடிகையின் மீது நடத்தப்பட்ட கோரக் கொடுமைக்குப் பிறகு சமுதாய மூடப் பழக்க வழக்கங்களைத் தாக்கி நாடகங்கள் அமைத்ததன் விளைவுதான்.

நோகன் பிரபு

நோகன் பிரபு கலந்துகொண்ட ஒரு விருந்தில் வால்டேரும் கலந்துகொண்டு தன் நண்பர்களோடு உரக்கப் பேசிக்கொண்டிருந்தார். “யார் அவன், நான் இருக்கிறேன் என்றுதெரியாமல் உரக்கப் பேசிக்கொண்டிருக்கிறான்” என்று அந்தப் பிரபு கேட்டார். உடனே வால்டேர் “பிரபு அவர்களே, ஏதோ ஒரு குடும்ப கவுரவத்திற்காக பிரபு பட்டம் பெற்றிருக்கிற தங்களைப் போலல்லாமல் சுயமாகவே சிந்தித்துச் சம்பாதித்து வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட ஒரு கனவான்” என்று சுடச்சுட பதிலளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த