பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

79

சிறு கதைதான் உலகப் புகழ் வாய்ந்தது. கேண்டைட்டைப் பற்றி பிரான்சின் தலைசிறந்த மேதையும், எழுத்தாளருமான அனடோல் பிரான்சு “வால்டேரின் கரங்களிலே பேனா ஓடுகின்றது; சிரிக்கின்றது” என்று எழுதுகின்றார். வால்டேர் தெரு வழியே போய்க் கொண்டிருந்த பொழுது கடன்காரன் ஒருவன் இவரை வழி மறித்துக் கடனக் கேட்டான். ஆத்திர மடைந்த வால்டேர் அவன் காதோடு சேர்த்து ஒரு அறை விட்டார். அவனை வால்டேரின் நண்பர் ஒருவர் சிறிது தூரம் அழைத்துக் கொண்டு போய் இவ்வளவு பெரிய மனிதரிடத்தில் நீ அடி வாங்கியதே நீ கொடுத்து வைத்த பாக்கியம். இது யாருக்குக் கிடைக்கும். போய்வா என்று அனுப்பி வைத்தார். அப்படி அவரிடம் அடி வாங்குவதுகூட ஒரு பெரும் பேறாக கருதிய காலம்.

இந்தக் கதை எழுதுவதற்குக் காரணமாயிருந்தது லிஸ்பன் பூகம்பம். 1756 நவம்பர் திங்களில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் 10,000 பேர் உயிரிழந்தனர். கிருத்துவ மதத்தின் முக்கியமான திருவிழாவான (Ali Saints Day) இந்த நாளில் இந்த பூகம்பம் நிகழ்ந்தது. லிஸ்பன் மக்கள் செய்த குற்றம் என்றனர் மத குருமார்கள். அதை எதிர்த்து தீப்பொறி பறக்க ஒரு கவிதை எழுதி, இது கடவுளின் குற்றம் என்று சுட்டிக் காட்டினார் வால்டேர்.

பிரெடரிக் மன்னன் ஒரு முறை அழைத்தபோது போக இயலாத வால்டேர் இரண்டாவது அழைப்பை ஏற்றுக் கொண்டு, அந்த அழகும், ஆடம்பரமும் நிறைந்த மாளிகையில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் தங்கி, சகல சுதந்தரத்தோடு காலத்தைக் கழித்து வந்தார். அரசனுடைய ஆதரவிலே இருந்தாரேயன்றி, சட்டங்களை மதித்து நடக்கவில்லை. இது மன்னனுக்கு ஒருவாறு வெறுப்பையுண்டாக்கியது. காரணம் சாக்சன் பத்திரங்கள் விற்றுக்கொண்டிருந்தது. அதில் யாரும் தனிப்பட்டவர்கள் பணம் போடக் கூடாது என்பது சட்டம். அதை மீறி அரசனுக்குத் தெரியாமல் பணம் போட்டுவிட்டார் வால்டேர். நாட்டின் சட்டங்களை மீறலாமா?