பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

83


கடைசியில் அவர் மக்களுக்கு சொன்னதெல்லாம் “என்னுடைய வணிகம் எல்லாம் என்னவென்றால், நான் என்ன நினைக்கிறேனோ அதை மக்களுக்குச் சொல்வதுதான்” (My trade is to say what I thing) இந்தத் தள்ளாத வயதிலும் இரேனி (Irene) என்ற ஒரு நாடகத்தை எழுதி, அது நடிக்கப்படுவதைத் தானே உட்கார்ந்து பார்த்துவிட்டு படுக்கையில் படுத்துவிட்டார். மரணம் நெருங்குவதையும் அறிந்தார்.

இதையறிந்த ஒரு மதகுரு அருகில் வந்து, தங்களுக்கு ஆத்ம விடுதலையளிக்க வந்திருக்கிறேன் என்றார். தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார் வால்டேர். கடவுளிடமிருந்து நேராக வருகிறேன் என்றார், மதகுரு. அதற்கான அத்தாட்சி காட்டுங்கள் பார்க்கலாம் என்று கேட்டார். வந்தவர் தலைகுனிந்தவாறு திரும்பிவிட்டார்.

அடுத்து ஒருவர் வந்தார். கத்தோலிக்க மதத்தில் தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறதென்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாலொழிய எந்தச் சடங்கும் செய்ய முடியாதென்றார். அதுவும் முடியாதென்றார் வால்டேர். “போய் வாருங்கள்” என்று அவரையும் திருப்பியனுப்பிவிட்டு, ஒரு காகிதத்தை எடுத்து “கடவுளை ஆராதித்தவண்ணமும், என் நண்பர்களை நேசித்தவாறும், என் எதிரிகள் எவருடனும் விரோதம் பாராட்டாமலும், மூட நம்பிக்கைகளை அடியோடு வெறுத்த வண்ணமும் நான் இறக்கிறேன்” என்று எழுதி, தன் செயலாளர் வாக்னரிடம் கொடுத்துவிட்டு உயிர் துறந்தார். நண்பர்கள் அவர் சடலத்தை பிரெஞ்சு எல்லைக்கப்பால் கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள். ஆனால் 1791ல் தேசிய மகாசபை கூடி, அவர் அஸ்திகளை ஆறு லட்சம் பேர் வணங்கி நிற்க, பிரெஞ்சு நாட்டின் பாரிசுக்குக் கொண்டு போய் தகனம் செய்தார்கள்.

வாழ்க வால்டேரின் புகழ்!