பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

55


எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும்.

- ஸாக்ரடீஸ்

சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான்.

-கார்லைல்

நூலறிவு பேசும் - மெய்யறிவு கேட்கும்.

-ஹோம்ஸ்

ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல்; அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல்.

-ரஸ்கின்

நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது.

-கதே

மனோ விகாரங்களே வாழ்வாகிய கப்பலைச் செலுத்தும் காற்று. அறிவே அதை நடத்தும் சுக்கான். காற்றின்றேல் கப்பல் நின்றுவிடும். சுக்கானின்றேல் தரை தட்டிவிடும்.

-ஷூல்ஜ்

வாழ்வு யோசிப்பவனுக்கு இன்ப நாடகம், உணர்பவனுக்குத் துன்ப நாடகம்.

-வால்ப்போல்

நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம், நீ உணர்வதே உனக்குச் சொந்தம்.

-ஷில்லர்

மனிதனுடைய உடைமையா யிருக்கக் கூடியது அறிவு ஒன்றே. ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்தக்க ஒரே வெற்றியாகும்.

-பழமொழி

உண்மை ஞானம் கண் முன் இருப்பதைக் காண்பதன்று, பின் வருவதை முன் அறிவதாகும்.

-டெரன்ஸ்