பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

97


உண்மையான நண்பன் முகஸ்துதி செய்தால் அதைப் போன்ற அசம்பாவிதம் காண முடியாது.

-போர்டு

குணங்களை முன்னால் கூறாமலும் குறைகளைப் புறத்தே கூறாமலும் இருந்து விட்டால் முகஸ்துதியும் அவதூறும் உலகில் இருக்கமாட்டா.

-பிஷப் ஹார்ன்

முகஸ்துதி என்னும் கள்ளநாணயம் தற்பெருமை இருப்பதாலேயே செலாவணியாகின்றது.

-ரோஷிவக்கல்டு

நாம் முகஸ்துதியை வெறுப்பதாகச் சில சமயங்களில் எண்ணிக் கொள்கிறோம். ஆனால், நாம் உண்மையில் வெறுப்பது நம்மைப் பிறர் முகஸ்துதி செய்யும் விதத்தையே.

-ரோஷிவக்கல்டு

புகழில் பேராசையுடைமை புகழுக்குத் தகுதியில்லை என்பதையே காட்டும்.

-ப்ளூட்டார்க்

தகுதியில்லாப் புகழுரை மாறுவேஷம் பூண்ட பழியேயாகும்.

- போப்

புகழுரையின் மதிப்பு அதை உரைப்போன் கையாளும் முறையைப் பொறுத்ததாகும். ஒருவன் கூறினால் புகழுரையாகத் தோன்றுவது மற்றொருவன் கூறும் பொழுது இகழுரையாகத் தோன்றும்.

-மாஸன்

இகழ்வதற்கு வேண்டிய அறிவைவிட அதிகமான அறிவு, சரியான முறையில் புகழ்வதற்கு வேண்டியதாகும்.

-டிலட்ஸன்