பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



பேசும் அளவுக்கு, நாட்டுக்கு அர்ப்பணித்த முழு சேவை வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஆனார்கள்.

3. ஏதென்ஸ் காலம் (முற்பகுதி)

ஏதென்ஸ் நகர மக்கள் வாழ்க்கையானது, சுதந்திரமான, முன்னேற்றமான, உரிமையுள்ள குடியரசுத்தனமான முறையிலே அமைந்திருந்தது.

ஏதென்ஸ் ஆட்சியாளர், தமது மக்களுக்கு பரிபூரண உரிமைகள் பல அளித்திருந்தாலும், அவர்கள் இராணுவத்தின் வலிமையை ஒரு சிறிதும் மறந்தார்கள் இல்லை. தமது மக்கள் பலம் வாய்ந்த போர் வீரர்களாக விளங்க வேண்டும் என்ற கொள்கையில் கண்ணுங் கருத்துமாகவே இருந்தார்கள்.

ஏதென்ஸ் மக்கள் செயல் வல்லவர்களாக இருக்க வேண்டும். அல்லது அறிவு வல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை புறக்கணித்து விட்டார்கள். மக்கள் அனைவரும் முழு வளர்ச்சிபெற வேண்டும். அதாவது தனிப்பட்ட ஒருவன் உடலாலும், அறிவாலும், ஆற்றலாலும் முழு வளர்ச்சி பெற்று, தாய் நாட்டின் போர்க் காலத்தில் சண்டையிடவும், சமாதான காலங்களில் அறிவாய்ந்த வாழ்வு வாழவும் வேண்டும் என்கிற கொள்கையையே இவர்கள் வற்புறுத்தினார்கள்.

கி.மு. 776ம் ஆண்டுக்கு முன்னர், ஏதென்ஸ் மக்கள் எல்லோரும் ஆடு மாடுகள் மேய்த்து வாழும் ஜீவிகளாகவே இருந்தனர். பிறகு, நன்கு நாகரிகம் அடைந்த அவர்கள், ஏதென்ஸ் நாட்டினராகி, குடியரசு முறையை கொள்கை அளவிலும், குதூகலமான நடைமுறையிலும் கடைபிடித்து ஒழுகினர். என்றாலும், அந்த சுதந்திரமான குடியரசு முறை, அங்கே அடங்கிக்கிடந்து வாழ்ந்த அதே சமயத்தில் அதிகமான அளவில் இருந்த அடிமைகளுக்குக் கிடைக்கவில்லை.