பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

51


மாவீரன் என்று புகழப் பெற்ற பிலாப்ஸ் இறந்த நாளை பெருமைப்படுத்த, ஒலிம்பிக் பந்தயங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்பது ஒருகதை, தொடங்கப் பெற்ற ஆண்டு கி.மு. 884 என்று கூறுகின்றனர்.

கதைகள் பல கற்பிக்கப்பட்டிருந்தாலும், கண்கூடாக நடைபெற்ற பந்தயங்கள், உண்மையாகவே மக்களிடையே உலா வந்திருக்கின்றன என்பது தான் உண்மையான செய்தியாகும்.

கிரேக்க நகர நாடுகளுக்கிடையே அடிக்கடி இடைவிடாமல் போர்கள் நடைபெற்றாலும், ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறும் காலத்தில், போர் வெறியைப் புறத்தே தள்ளிவிட்டு, ஒற்றுமை உள்ளத்தோடு, போட்டிகளில் பங்கு பெற்று உவகை பெற வேண்டும் என்ற கட்டாய விதிக்கு எல்லோருமே கட்டுப்பட்டிருந்தனர்.

ஸ்பார்ட்டா நாட்டின் விதிமுறைகளை வகுத்துக் கொடுத்திருந்த லிக்கர்கஸ் (Lycurgus) என்பவரும், எலிஸ் நகரத்தைச் சேர்ந்த இபிடஸ் (Iphitus) என்பவரும் இணைந்து ஒலிம்பிக் பந்தய விழாவினை கி.மு. 820ம் ஆண்டு, மீண்டும் வெளிக்கொணர்ந்து நடத்தினர் என்பதாக, ஒரு வரலாற்றுக் குறிப்புக் கூறுகின்றது.

இந்தக் குறிப்பானது ஒலிம்பிக் பந்தயங்களை அதாவது இருந்து மறைந்த பந்தயங்களை மீண்டும் உலகுக்கு மீட்டுக் கொண்டு வந்ததாகத் தான் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆகவே, ஒலிம்பிக் பந்தயங்களின் தொடக்கத்திற்கு இக்குறிப்பு நமக்கு உதவாமல் போகிறது.

வரலாற்றுக்குட்படாத நாளிலிருந்தே, விமரிசையாக இந்தப் பந்தய விழா எடுப்பாக நடைபெற்று வந்திருக்கிறது. என்றக் குறிப்பையே நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.