பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கி.மு. 776

கி.மு. 776ம் ஆண்டிலிருந்து தான், ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன என்னும் முக்கிய குறிப்பானது தெளிவாகக் கூறப்படுகிறது. இதை முதல் ஒலிம்பிக் பந்தயங்கள் என்றே வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த முதல் பந்தயங்களானது, முக்கியமான இரு மன்னர்களின் மகோன்னதமான முனைப்பினால் தான், முழு முயற்சியினால் தான் சிறப்பாக வெளிக் கொணரப்பட்டன என்பார்கள். அவர்களில் ஒருவர் பிசா நாட்டு மன்னன் கிளியோஸ்தனிஸ் (Cleosthenes), மற்றொரு மன்னன் எலிஸ் நாட்டை ஆண்ட இபிடஸ் (phitus) என்பவன்.

இருவருக்கும் போர்களின் மேல் ஏற்பட்ட எரிச்சல், இனந்தெரியாத வெறுப்பு, அமைதியின் மேல் கொண்டிருந்த ஆணித்தரமான நம்பிக்கை; இப்படிப்பட்ட எண்ணத்தை ஊட்டி உறுதியுடன் செயல்படவைத்தன.

புனிதமான மத விழாவாக நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்கள் தான், போர் வெறியை அடக்கி, போர்களை நிறுத்தி வைக்க முடியும் என்று அவர்கள் விரும்பி, ஒலிம்பியா பகுதியிலே பழைய ஒலிம்பிக் விழாவினை ஆரம்பித்து வைத்தார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.

முதல் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி வாகை சூடி, ஒப்பற்றப் புகழை அடைந்தவன் கரோபஸ் என்பவனாவான் இவன் தொழிலில் சமையல் காரனாவான்.

கி.மு. 776ம் ஆண்டு முதல் பந்தயங்கள் நடைபெற்றன என்றால் இதன் முடிவான பந்தயங்கள் கி.பி. 394 ம் ஆண்டோடு நின்று விட்டன. இப்படியாக 1200 ஆண்டுகளில் 293 ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்று நிலையான புகழைப் பெற்று விட்டன.