பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

53


ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்ற விதங்கள்

ஒலிம்பிக் பந்தயங்கள் என்பது விளையாட்டுப் போட்டிக்கான விழா என்றாலும், அவை மதசம்பந்தமான விழாவாகவே மதிக்கப் பெற்றன. முற்றிலும் கிரேக்கர்களுக்கு உரிய இவ்விழாவானது, முதல் கடவுளாகவும் முது பெருங்கடவுளாகவும் விளங்கிய சீயஸ் தெய்வத்தை மகிமைப் படுத்துவதற்காக நடத்தப்பட்டன.

ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறக் கூடிய குறித்த காலத்திற்கு முன்னதாக, கிரேக்க நாடு முழுவதும் செய்தி அறிவிப்பாளர்களால் மக்களுக்கு அறிவிக்கப்படும். அதாவது, பயிற்சி செய்வதற்கும் பக்குவம் பெறுவதற்கும் மக்களுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், முன் கூட்டியே திட்டவட்டமாகத் தேதியைக் குறிப்பிட்டு,சேதிகள் தெளிவாக அறிவிக்கப்படும்.

ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறுகின்ற குறிப்பிட்ட அந்த மாதமானது, புனித மாதமாகக் கருதப்படும். இந்த மாதத்தில் எந்த விதமானத் தகராறுகளோ, அல்லது போர்களோ நடை பெறக் கூடாது என்பது தான் முக்கியமான தன்மையாகும். இந்தப் புனித மாதத்தில் போர்கள் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்படும். (Truce)

ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெறுகின்ற உடலாளர்கள் (Athlete) (போட்டியாளர்கள்) முதல் போட்டிகளை விரும்பிக் காண வருகிற பார்வையாளர்கள் வரை, யாரும் எந்த விதமான அச்சமுமின்றி, பகை பற்றிய பயமுமின்றி ஒலிம்பியா பகுதிக்கு வரலாம்.

இப்படிப்பட்ட புனித நாட்களில் யாரேனும் யார் மீதும் பகை உணர்ச்சி காரணமாக, விதிகளை மீறித் தாக்குதல்கள் நடத்தினால், புனிதத்தை அவமானப்படுத்தி, களங்கப்