பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

69


இந்த உலக ஒலிம்பிக் கழகத்தின் முக்கிய பணியானது, எந்த ஆண்டு எங்கே பந்தயங்கள் நடைபெறவேண்டும் என்று இடத்தைக் குறிப்பது (Venue); மற்றும் போட்டிகளுக்கான விதி முறைகளை அமைத்து மேலும் ஒலிம்பிக் பந்தயங்களின் நடை முறை பற்றிய விவரங்களையும் இக்குழு அமுல் படுத்தும்.

புதிய ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள விதிமுறைகள்:

1. ஒரு வீரர் அல்லது வீராங்கனை, ஒலிம்பிக்பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்பினால், அவர் ஒரு நாட்டின் குடி மகனாக இருக்கவேண்டும். அவர் வசிக்கும் நாடானது, ஒலிம்பிக் கழகத்தில் உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.

2. ஒரு வீரர் அல்லது வீராங்கனை, ஒரு நாட்டின் சார்பாக ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்ட பிறகு, அடுத்து வரும் பந்தயங்களில் வேறு நாட்டின் பிரதிநிதியாக பங்கு பெற முடியாது. அப்படி அவர் வாழும் நாடு வேறு ஒரு நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் வந்து, அது உலக நடைமுறைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மாறி, அதை மற்ற நாடுகளும் அங்கீகரித்தால், அவர் அந்த மாறிய நாட்டின் பிரதிநிதியாகப் பங்கு பெறலாம்.

3. போட்டியிட விரும்பும் உடலாளர்கள், வணிகமுறை விளையாட்டு வீரர்களாக இல்லாமல், பொழுது போக்கு உடலாளர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மையை அந்தந்த நாட்டின் தேசியக் கழகம், அந்த வீரர் பற்றிய விவரங்களைக் குறிக்கும் ஒரு குறிப்பேட்டில் கையொப்பமிட்டு உறுதி செய்திட வேண்டும்.

அத்துடன், போட்டியிடுகிற உடலாளரும், தான் ஒரு பொழுது போக்கு உடலாளர் என்னும் உறுதி மொழியை எழுத்து மூலமாக அளித்திட வேண்டும்.