பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

5





உலக நாடுகளில் உடற்கல்வி

1. கிரேக்க நாட்டில் உடற்கல்வி

அகமும் புறமும்

உடற்பயிற்சி, விளையாட்டு, ஒலிம்பிக் பந்தயங்கள் என்றவுடன், நமது நினைவுக்கு முதலில் வருவது கிரேக்க நாடேயாகும்.

ஐரோப்பிய நாடுகளில் சிறந்த நாகரிகத்தில் திளைத்த முதல் நாடாக கிரேக்கம் விளங்கியது என்றும், கிழக்கத்திய மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நாகரிகப் பாலமாக நனிசிறந்து விளங்கியது என்றும் வரலாற்றாசிரியர்கள் பெருமையாய் புகழ்ந்துரைக்கின்றார்கள்.

அத்தகைய அற்புதமான நாகரிகம், அவர்களிடையே ஆதிநாட்களில் அரும்பி மணம் வீசியதற்கு, அந்த நாட்டின் சுற்றுப்புறச் சூழ்நிலையும், தட்பவெட்ப சீதோஷ்ண நிலையும் ஒரு சிறப்புக் காரணமாய் அமைந்திருந்தது என்றும் கூறுவார்கள்.

பச்சைப்பசேல் என்று பரந்த மலைப் பகுதிகள், பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் பள்ளத்தாக்குப் பகுதிகள், பெரிதும் வாட்டாத அதே சமயத்தில் இதமாகத் தாக்குகின்ற குளிர், நீண்ட கோடை காலங்கள், இப்படியாக அமைந்த இயற்கைச் சூழ்நிலை அக்கால கிரேக்க மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியதோடல்லாமல், அற்புதமான கலைகளைப் படைக்கவும், ஆத்ம ஆன்ம பலத்தை வளர்க்கவும் உதவின.

கிரேக்க நாடு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்த முதல் நாடாகத் திகழ்வதால், அத்தகைய வீறுமிக்க வரலாற்றினை நாமும் அறிந்து மகிழ்வோம்.