பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

105


அப்போது எகிப்து ராணுவத்தின் கர்னல் என்ற பொறுப்பை வகித்துக் கொண்டிருந்தவர் நாசர். அவர், பிரிட்டன் செய்துவிட்ட படுபாதக நயவஞ்சக சுயநலச் செயலைக்கண்டு மனம் பதைத்தார்!

நாடு இப்படிச் சீரழிகிறதே என்ற கவலையே இல்லாமல் மன்னன் பரூக் சுகபோக மது மங்கைக் களியாட்டங்களிலே மயங்கிக் கிடக்கிறானே என்று நாசர் நெஞ்சம் துடிதுடித்தது.

பிரிட்டன் நயவஞ்சக சுயநிலைப் போக்கையும், மயங்கிக் கிடக்கும் மன்னன் பரூக் மனநிலையினையும் எப்படியாவது மாற்றியாக வேண்டும் என்று திட்டம் வகுத்தார் நாசர்!

எகிப்து மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள ஜெனரல் நாகிப் என்ற ராணுவத் தளபதி அப்போது எகிப்து ராணுவத்தின் தலைவர் பதவியை வகித்துவந்தார்.

கர்னல் நாசர் ராணுவத் தலைவரான நாகிப்பைச் சந்தித்து, தனது புரட்சித் திட்டங்களை அவரிடம் கூறி, அனுமதி பெற்றார். இருவரது விவாதமும் தேசபக்தி உணர்விலே மிதந்த அலைகளாயின! எப்படி வெற்றிக்கரை சேரலாம் என்றே இருவரும் சிந்தித்தார்கள். இறுதியாக புரட்சிக் கட்டம் இறுதிக்கு வந்தது.

எகிப்து ராணுவத்தின் மகாப்பெரும் புரட்சி 1952, ஜூலை23-ஆம்தேதி நடைபெற்றது. புரட்சியை நடத்தியது யார் தெரியுமா? நாசர் அல்ல! நாகிப் என்ற ராணுவ மாவீரத் தலைவன்!