பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



20

உலக வரலாற்றில்



சோசலிசம் என்ற இந்தச்சமநீதி சமுதாய அமைப்புமுறை அன்று உலகப் பாட்டாளி மக்களின் இனிய கனவாக இருந்தது. சோவியத் ரஷ்யாவிலே இந்த சீர்மிகு அமைப்புமுறை இன்ப நினைவாக, இனிய அனுபவமாகக் காட்சி தருகின்றது.

வறுமைக் காட்டிலே வனவிலங்குகளாய் அலைந்து கொண்டு இருக்கின்ற மக்களின் வீழ்ச்சிக்கான அடிப்படையைப் பற்றிச் சிந்தித்து, அவர்களுடைய வாழ்க்கையைப் பலப்படுத்தி கைதூக்கி விடுவதற்கான கருவியினை விஞ்ஞானமுறையிலே உருவாக்கி விளக்கிய முதல் அறிஞன் காரல் மாக்ஸ், ஒரு சிந்தனைச் செம்மல், தத்துவப் பேராசிரியர், ஏழைகள் வாழ்க்கையைச் சிந்தித்தவர். முதாலாளிகளின் முதுகெலும்பை முறித்தவன். அவன் துவக்கி வைத்த பேரியக்கம், இன்றும் உலகத்தில் பல நாடுகளிலே, பல தத்துவங்களிலே, பாட்டாளி மக்களின் வாழ்க்கையிலே உயிரோட்டமாக ஜீவ களையோடு ஒளிவிடுகின்றன.

தத்துவ ஞானி காரல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே திங்கள் 5-ம் நாள் ஜெர்மனி நாட்டில் உள்ள டிரியா என்னும் ஊரில் பிறந்தார். யூத வழக்கறிஞரான ஹீன்ரிச்சு இவருடைய தந்தையாவார். அன்றைய ஜெர்மன் அரசு யூத இனத்தவரிடம் விரோதம் காட்டுவதைப் பழிவாங்குவதை அறிந்த அவர் சீர்திருத்த கிருஸ்துவ சமயத்தைத் தழுவிக்கொண்டார்.

காரல் மார்க்ஸ் தான் பிறந்த ஊரிலே ஆரம்பக் கல்வி கற்றார். படிப்படியாக கல்வியில் உயர்ந்து, தத்துவம்,