பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

நூறு கல் எல்லையுங் கால்நடையாகச் சென்று தாயுஞ் சேய்களும் மால்டன் (Malden) என்ற நகரைச் சேர்ந்தனர். சிறிய தகப்பனார், புக்கரையும் அவருடன் பிறந்தாரையும் தாம் வேலை செய்துவர ஏற்பாடு செய்திருந்த உப்புலைக்களத்தில் வேலை பழக விட்டார். புக்கர் காலை நான்கு மணி முதல் அவ்விளமையிலேயே வேலை செய்ய வேண்டி ஏற்பட்டது. இளம்பருவந்தொட்டே புக்கருக்குப் படிக்கவேண்டும் என்ற பெருவிருப்பம் உண்டு. தாயின் உதவியால் புக்கர் முதற்பாட புத்தகம் ஒன்று பெற்றார். அதனைப் பிறர் உதவியின்றி அவரே எழுத்துக் கூட்டிப் படித்துப் பழகிக்கொண்டார். பக்கத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த தம்மினத்தார் இருந்தாலன்றோ அவர் இவரை அணுகியிருக்கக்கூடும்? வெள்ளையரிடம் போய்க் கேட்பதற்கோ, புக்கருக்கு அச்சம் உண்டாயிற்று. புக்கர் படிக்க வேண்டுமென்ற பேராவலோடு இருந்து வரும் நாளில் ஒரு நாள், நீகிரோச் சிறுவன் ஒருவன், ஓகியோ (Ohio) என்ற ஊரிலிருந்து வந்து சேர்ந்தான். அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியும். அதை அறியவந்த மால்டன் நகரத்து நீகிரோமக்கள் அவனிடம் ஒரு செய்தித்தாளே நாடோறும் வேலை முடிந்த பிறகு கொடுத்துப் படிக்கச்செய்து கேட்கத் தொடங்கினார்கள். இப்படிச் சில நாள் கழிந்து வருங்கால், நீகிரோ வகுப்பாருக்கென்று அவ்வூரில் ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் ஊராரிடையே எழுந்தது.