பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

சொல்லிக்கொடுக்க ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஓகியோவிலிருந்து வந்தவனுடைய இளமை அவன் கணக்காயர் தொழிலைப்பெற இடம் தாராதாயிற்று. வேறு ஒருவர் ஓகியோவிலிருந்து தற்செயலாய் வந்து சேர்ந்தார். அவரைக்கொண்டு ஒரு பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. அவ்வாசிரியர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிற் சாப்பிட்டு வரவேண்டுமென்றும், அதைத் தவிர்த்து அவருக்கு ஒவ்வொரு விடும் சிறு தொகையை மாதாமாதம் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடாயிற்று. ஆசிரியருக்கு உண்டியில் குறைவு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு வீட்டாரும் சிறந்த வழியில் அவருக்கு உணவளிக்க நினைத்தமையால், குறைவு எப்படி உண்டாம்? 'கணக்காயர் நாள்' என்று வருமென்று எதிர்பார்த்து நின்றார் புக்கரும் பிற மாணவரும் என்றால், ஆசிரியருக்கு இன்னடிசில் படைக்கப்பட்டமை அறியப்படாதோ? கணக்காயர்கள் கிடைக்கக் கிடைக்கப் பகற்பள்ளிக்கூடங்கள், இரவுப் பள்ளிக் கூடங்கள், ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் எழத்தொடங்கின. அறுபது, எழுபது வயதுள்ள மாந்தரும் பள்ளியிற்சேர்வாராயினர். இம்மக்களுடைய கருத்து, தாம் இறக்குமுன் தமது வேத புத்தகத்தைப் படிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே.