பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹேம்புடன் பள்ளியிற்கல்வி

29

அவரது கைத்தொழிலாற் கிடைத்த சிற்றுண்டிக்கு அவையெல்லாம் ஈடாகா அல்லவா? “தெண்ணீர் அடுபுற்கையாயினும், தாள் தந்தது உண்ணலின் ஊங்கு இனியது இல்," என்று திருவள்ளுவர் கூறிய வாய் மொழி எந்நாட்டிற்கும் ஏற்கும் என்பது இதனாலும் புலப்படுகின்றது.

இது நிற்க. புக்கருக்கு இடப்பட்ட வேலையை அவர் செவ்வனே செய்ததற்கு மகிழ்ந்து கப்பற்றலைவன் நாடோறும் வேண்டுமானாலும் கூலிக்கு அங்கு வேலை தருவதாகக் கூறினான். அவ்வாறே அவ்வேலையை ஒப்புக்கொண்டு புக்கர் சில நாள் வேலை செய்து, பிறகு தாம் குறித்த ஊரை நோக்கிப் புறப்படலானார். விரைவில் ஹேம்புடன் வந்து சேர்ந்து பள்ளிக்கூடக் கட்டடத்தைக் கண்டவுடனே அளவிலா மகிழ்ச்சி எய்தினார். பெரியதாயும், கல்லாற் கட்டப்பட்டதாயும், மூன்று மாடம் உடையதாயும் இருந்த அக்கட்டடத்தை முதன் முறையாக அவர் கண்ட பொழுது அவருக்குண்டான மகிழ்ச்சியைக்கொண்டு அளவிட்டால், பள்ளிக் கட்டடங்கள் கட்டுதற்குப் பெரும்பணம் அளிக்கும் அறவோர் பின்னும் பேருக்கம் உடையவராவர் என்பதில் ஐயமில்லை.

பின்பு புக்கர் தம்மை வகுப்பிற் சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டித் தலைமை ஆசிரியை முன் போய் நின்றார்.