பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹேம்புடன் பள்ளியிற்கல்வி

39

என்று நினைக்க இடம் இருந்ததில்லையே! தாய் இறக்கும் நேரத்தில் தாம் அவளுடன் இருக்கவேண்டும் என்ற புக்கரது விருப்பம் வீணாயிற்றே ! மகன் மேலோங்கி விளங்கப் போகும் நாளைக் காணாது கழிந்தனளே அந்நற்றாய்!!! இவை போன்ற எண்ணமெல்லாம் புக்கர் மனத்தில் எழாமலா இருக்கும்? தாய் சென்று சில நாள் ஆனபின் புக்கருக்குச் சில பணிகள் கிடைத்தன. ரப்னர் அம்மையிடமும் நிலக்கரிச் சுரங்கத்திலுமாக ஈரிடங்களிற் பணியாற்றி ஹேம்புடன் மீள்வதற்குப் போதிய பொருளைப் புக்கர் தேடிக் கொண்டார்.

கல்லூரி திறக்க இன்னும் மூன்று வாரங்கள் உள. இந்நிலையில், ஹேம்புடன் தலைமை ஆசிரியையிடமிருந்து புக்கருக்கு ஒரு முடங்கல் வந்தது. கல்லூரிக் கட்டடத்தைத் தூய்மைப்படுத்துவதில் உதவி செய்வதற்காகப் புக்கர் அழைக்கப்பட்டிருந்தார். அவரும் உடனே புறப்பட்டுச் சென்றார். அங்கு வேலை செய்து பெறக் கூடிய கூலியை மூன்றாம் ஆண்டுக்கு முன் பணமாக வைத்துக்கொள்ள இஃது ஒர் அருமையான வாய்ப்பு அன்றோ? வேலையைச் செவ்வனே செய்தார் புக்கர். தலைமை ஆசிரியையும் தன் கையாலே சுத்தஞ்செய்து கட்டடத்தைச் செப்பஞ்செய்ததைக் கண்ட புக்கருக்கு மனம் உருகாமலிருக்குமா? அது முதல், தொழிலின்