பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

மேன்மையைக் குறித்து அறிவுறுத்தாத எந்த நீகிரோட் பள்ளிக்கூடத்தையும், அவர் பள்ளிக்கூடமாக மதிப்பதில்லை. இனி, அவரது ஹேம்புடன் படிப்பின் மூன்றாம் ஆண்டு தொடங்கிற்று. தாம் தாளாற்றிய நேரம் ஒழிய மற்ற நேரமெல்லாம் அவர் கடும்படிப்பில் ஈடுபட்டார். சிறப்புடன் தேர்ச்சி பெற வேண்டும் என்று அவர் முயன்ற முயற்சி பெருமையைத் தந்தது. "அருமை யுடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்" என்பது பொய்யாமொழியன்றோ? 1875 ஜூன் மாதத்தில் அவரது ஹேம்புடன் கல்வி முற்றுப் பெற்றது. சிறப்பொடு தேர்ச்சியடைந்து பட்டமும் பெற்றார்.

ஹேம்புடன் கல்வியால் அவருக்கு உண்டான நன்மைகளிற்சில மிகச் சிறந்தவை. அரும்பெருந் தகைமை வாய்ந்த ஆர்ம்ஸ்டிராங்கு என்ற சான்றோர் கூட்டுறவு அவருக்கு அமைந்ததும், தொழிலின் மேன்மையை அவர் ஐயமின்றி அறிந்துகொண்டதும், தனக்கென வாழாது பிறர்க்கென முயலும் பெருமையை அவர் தெளிந்துகொண்டதும் சிறந்த கலங்கள் என்க.