பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

லானவை -அவருக்குக் கிடைக்கும். அவற்றையெல்லாம் குறிப்பிட்டதொரு நாளிலே பெற்று ஒரு விழாக் கொண்டாடுவார். அவ்விழாவில் அவை விற்கப்படும். இங்ஙனம் நடத்தப்பட்ட பல விழாக்களின் பயனாய்ச் சிறிது ஆக்கம் உண்டாயிற்று. மேலும், சிலரைப் பணங்காசு கொடுக்கும்படியுங் கேட்டு வந்தார். வெள்ளையரும் சிறிது சிறிது கொடுத்துதவினர். நீகிரோ வருட்பலர், ஆயுள் நாள் முழுதும் அடிமைகளாய் இருந்தவர், இப்பொழுது தத்தம்மால் இயன்றதைக் கொடுக்கப் பேரார்வத்துடன் முன் வந்தனர். ஒரு நாள் நிகிரோ ஒளவை ஒருத்தி தட்டித் தடுமாறிக்கொண்டு புக்கரது அறைப் புறத்தே முட்டிக்கொண்டு வந்து நின்றாள் ; நின்று, "நான் என் வாழ்நாளை அடிமையிற் கழித்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும். நீங்களும் ஒலிவியா அம்மையும் நம்மவரைச் சிறந்த ஆண் பெண்களாக்க முயலுகிறீர்கள் என்பதை அறிவேன். என்னி டத்திலோ, பணம் இல்லை. என் சேமிப்பு எல்லாம் இந்த ஆறு முட்டைகளே. இவற்றை இம்மாணவரின் கல்வியின்பொருட்டு எடுத்துக்கொள்ளுமாறு உங்களை வேண்டுகிறேன்,' என்று சொல்லி முட்டைகளை அளித்தாள். இதைப் போன்று ஆர்வத்துடன் அளிக்கப்பட்ட சிறு சிறு பொருளெல்லாம் வந்து சேரவே, மூன்று மாத காலத்தில் இருநூற்றைம்பது டாலர் ஆயின. வாங்கியிருந்த கடனை உடனே திருப்பிக் கொடுத்தார் புக்கர்.