பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் அரிய தொண்டு

65

ஒருவர் ஹேம்புடனிலிருந்து வந்து புக்கருக்குப் பேருதவி செய்வாராயினர். அவர் கலாசாலைப் பண்டாரத்தார் பதவியைத் தாங்கி வந்ததேயன்றி, புக்கர் ஊரிலில்லாத வேளைகளில் அவருக்காகத் தலைவர் வேலையைப் பார்த்து வருவாராயினர்.

கலாசாலையின் இரண்டாம் ஆண்டு முடிவிற்குள் முற்கூறிய கட்டடம் அமைக்கப்பட்டுவிட்டது. இனி, உண்டி நிலையம் ஒன்று அமைக்க எண்ணினார் புக்கர். வெளியூரிலிருந்து வந்திருந்த மாணவர் பலரையும் அன்னார் பசியையுந் தவிர, அதனை அமைக்க வேறொன்றுங் கண்டிலர். ஆனால், கட்டடத்தின் கீழே தொட்டால், ஓர் அடித்தள அறை தோன்றுமென்பது தோற்றிற்று. அதனை மாணவர் தொட்டனர். இப்பொழுது அது சமையலுக்கும் சாப்பாட்டிற்கும் உரிய அறையாக உதவிற்று. வணிகருட்சிலர் அந்நிலையத்திற்கு வேண்டிய சாப்பாட்டுப் பொருள்களைக் கடனாகக் கொடுக்க முன் வந்தார்கள். எனவே, உண்டி விடுதி தலையெடுத்தது. ஆனால், உண்டி முதற்கண் நன்றாய் இல்லை. காலத்திற் படைக்க வேண்டும் என்ற எண்ணமே மடையர்க்கு இல்லை. இரண்டு வாரம் வரையில் ஒன்று நன்றாயிருந்தால், மற்றொன்று கெட்டிருக்கும் என்றவாறு இருந்தது. குடிக்கும் நீர் பற்றிக் குழப்பமும், காபிக் குவளையைக் குறித்துக் கலாமும் பற்பல அந்நாளில் நிகழ்ந்தன.