பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

உழைப்பால் உயர்ந்த ஒருவர்


ஆயினும், பொறுமையாலும் உலைவிலா உழைப்பாலும் மெல்ல மெல்லக் குழப்பம் அகன்று அமைதி நிலவிற்று. இன்று டஸ்கிகீக்குச் சென்று பார்த்தால், அங்கு உண்டி நிலையம் மிக்க அமைதியுடன் திகழக் காணலாம். சாப்பாட்டு அறை நல்ல காற்றோட்டம் உடையதாயும், ஒளி பெறுவதாயும், பெரியதாயுங் காணப்படும். அழகிய அரிய உண்டிகள் நம்மை அழைப்பன போலிருக்கும். மேசைகளும் மேசை விரிப்புக்களும் பூச்செடிகளும் உண்டு. உணவுப்பொருள்களெல்லாம் நேரந் தவரது படைக்கப்படுவதைக் காணலாம். முதலில் துன்பங்கள் தந்தவை முடிவில் இன்பங்கள் பயக்கும் என்ற உண்மையை அறியாதோர்க்கும் அறிவுறுத்தி நிறகிறது அவ்வுண்டி நிலையம்.

சில நாட்கள் கழித்து, அக்கல்லூரியைக் காணப் பெரியார் சிலர் வந்தனர். முன் இருநூற்றைம்பது டாலர் கடன் கொடுத்துதவிய மார்ஷல் என்பவரும், முன் புக்கரைத் துடைப்பத் தேர்வால் தேர்ந்தெடுத்த மேரி மேக்கி (Miss Mary F. Mackie) அம்மையும், புக்கரை டஸ்கிகீக்கு அனுப்பிய ஆர்ம்ஸ்டிராங்கு என்பாரும் ஒருவர் பின் ஒருவராக வந்து பார்த்துப் போயினர். அவர்களெல்லாம் அக்கல்லூரி காலம்பெற அமைந்திருந்த முன்னேற்றத்தைக் கண்டு வியந்து மகிழ்வாராயினர்.