பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்னும் அத்தொண்டே

73


நியூ யார்க்கு (New York), புரூக்லின் (Brooklyn), பாஸ்டன் (Boston), பிலடெல்பியா (Philadelphia) முதலான ஊர்களில் இருவருமாகச் சுற்றி ஆதரவு தேடினர். பின்னர், சில இடங்களுக்குப் புக்கர். தனியே சென்று முயல்வாராயினர். அம்முயற்சிகளில் அவர் எங்ஙனம் வெற்றி பெற்றார் எனப் பலர் அவரைக் கேட்டறிய விரும்பியதுண்டு. அன்னார்க்கு அவர் உரைத்த இரகசியம் இரண்டே. தனிப்பட்ட ஆட்களிடமும் சங்கங்களிலும் தாம் டஸ்கிகீயில் செய்து வரும் வேலையை முற்றுறத் தெரிவித்தது ஒன்று; பயனைக் குறித்துக் கவலைப்படாது மீண்டும் தமது வேலையைச் செவ்வனே செய்து வந்தது மற்றொன்று, ஒரு செயலில் ஒருவர் வெற்றியுற வேண்டுமானால், தம்மை மறந்து அக்கருமமே கண்ணாய் இருத்தல் வேண்டுமென்று புக்கர் சொல்லி வந்ததோடு செயலிலுங்காட்டி வந்தார்.

'பொருள் நிரம்பக் கொடுத்திலரே!' எனப் பொருளுடையாரைத் திட்டுபவரிடம் அவருக்கு நல்ல எண்ணம் இல்லை. பணக்காரரிடஞ் சென்று பார்த்தாலன்றோ, அவருக்குள்ள பல கடமைகளையும் அவர் பிறரறியாது செய்யும் பல கொடைகளையும் அறிந்துகொள்ளக் கூடுமென்றும், கேட்ட யாவர்க்குங் கொடுப்பது என்பது செல்வர் எல்லாருக்கும் இயலாது என்றும் அவருணர்ந்ததைச் சில நண்பர்களுக்குக் கூறியுள்ளார்,