பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

புக்கர் ஓர் அரசரல்லர்; ஆயினும், அமெரிக்க (America) மக்களாலும், அரசரெனத் தக்காராலும் பாராட்டப்பட்டவர். ஐக்கிய மாகாணங்களின் தலைவராயிருந்த மெக்கின்லி (Mr. Mckinley, President of the United States of America) என்பவரே புக்கரது சிறந்த அறிவையும் விடாமுயற்சியையும் பாராட்டி, "அவர் தேர்ந்த ஆசிரியர்; நல்ல சொல் வல்லார்; உண்மை உபகாரியர்," என்றெல்லாம் அவரைக் குறித்துக் கூறியிருக்கின்றார் என்றால், வேறு பலப்படக் கூற வேண்டிய அவசியம் இல்லை. இளமையிலே தம்பிடியின்றித் தரையிலே கிடந்து பசியால் வாடிய புக்கர், பின்னாளிற் பல பட்டணங்களிலும் தமது சொந்த ஊரிலும் அவ்வம் மக்களால் வரவேற்கப்பட்டுப் பெருமைப்படுத்தப்பட்டார் என்றால், வேறு பல பகர வேண்டுமோ?

சுருங்கக் கூறின், 'பெரியார் எக்குடியிலும் பிறத்தல் கூடும்,' என்னும் உண்மையையும், மிகத் தாழ்ந்த குடியிற் பிறந்தாரும் தமது அருமுயற்சி, உழைப்பு இவை காரணமாக உயர்ந்தவர் எனப்படுவார் அடையுஞ் சீருக்கும் சிறப்புக்கும் ஒப்பாகவோ மிகுதியாகவோ பீடும் பெருமையும் அடைவர் என்னும் உண்மையையும் நன்று எடுத்துக் காட்டும் இவ்வரலாறு, உழைப்பால் உயர்ந்த புக்கரது வரலாற்றைப் படிப்பதால், தமிழ் மக்கள் விழுமிய பயன் எய்துவார்கள் என்னுங் கருத்தான் இது வெளியிடப்படுகிறது.

ஆசிரியன்