பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல் வன்மை

89

நாட்காலை, அவரை நாடி வந்து அவருடன் பேச விரும்பினர் பலரென்றால், அவரது சொல் மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டமை ஒருவாறு புலப்படும்.

புக்கர் எப்பொழுது பேசினாலும் தாம் டஸ்கிகீயிற் செய்து வரும் வேலையின் சிறப்பை உரைத்து அதற்கு ஆதரவு தேடுவார். அவருடைய சொற்பொழிவுகள் எல்லாவற்றிலும் உயிர் இருந்தது. அப்பொழுதைக்கப்பொழுது தம்முன் உள்ள சபையாருக்குத் தகுந்த முறையிற் பேசும் பெற்றி அவரிடத்து நன்கு அமைந்திருந்தது. கதை சொல்ல வேண்டிய வேளையிற் கதை சொல்லியும், பொருள் கூற வேண்டிய இடத்திற் பொருளை விளக்கமாக அறிவித்தும் வந்தமையால், புக்கருடைய சொற்பொழிவுகள் பாராட்டப்பட்டன. உண்மையென்று உணராதவற்றை அவர் கூறுவதில்லை : உண்மையை அஞ்சா நெஞ்சோடு அறைவர். இடர்ப்பாடு மிக்க இடங்களிற் சொற்களைத் தேர்ந்து ஆளும் திறன் அவருக்கு வாய்த்திருந்தது. இக்காரணங்களாலும் அவருடைய சொல் வன்மை யாண்டும் போற்றப்பட்டது.