பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8



என்பது பண்டிதமணியின் நன்றிச்சொல். பல பட்டங்கள் இருந்தாலும் 1925இல் இச்சபை வழங்கிய பண்டிதமணி என்ற முதற்பட்டமே பெரும் பேராசிரியர் கதிரேசனார்க்கு இயற்பெயரினும் தனிப்பெயராக வழக்குப் பெற்றுவிட்டது. இச்சபையைப் பெரும் புலவர் சோழவந்தான் அரசன் சண்முகனார் தலைமையில் 1909இல் தோற்றி வளர்த்து இன்றும் இனியும் காக்கும் வ. பழ. சா. குடும்பத்தாரின் தமிழ்த்தொண்டு தமிழ் மக்களின் தவத்தொண்டாகும். இச்சபை இன்னும் ஒராண்டில் பவளவிழாக் கொண்டாடும் பருவம் எய்தும்.

பண்டிதமணியின் வாழ்க்கை வரலாறு வித்துவான் விச.திருநாவுக்கரசு, உலகஞ் சுற்றிய தமிழர் சோமலெ , புலவர் சோமசுந்தரனார் முதலிய பெருமக்களால் சுவையாக உரைநடையில் எழுதப்பட்டுள்ளது. இவ்வரலாறு தனிக்கட்டுரைகளாகவும் பலரால் வரையப்பட்டுள. காப்பியத்துக்கு வேண்டிய கூறுகள் இவ்வாழ்க்கை வரலாற்றில் மிளிர்ந்து கிடப்பதை எளிதில் உணரலாம். செய்யுட் சோலைகளில் திளைத்துக் குளிர்ந்து இலக்கிய நயங்கண்ட பண்டிதமணியார் வரலாறு செய்யுளுருப் பெறுவதே சிறப்பாம் என எனக்குத் தோன்றியது. புலவனைப் பொருளாகக் கொண்ட தமிழ்க்காப்பியம் இதுவரை தோன்றியதில்லை. பண்டிதமணி வரலாறு காப்பியமாகுமேல் , பல தமிழுணர்ச்சிக்கும் புதிய தமிழ் வளர்ச்சிக்கும் உரங்கிடைக்கும் என்றும் எண்ணினேன்.

கவியரசுப் புகழ் பெற்ற முடியரசன் என் மனக்கண் முன்னே தோன்றினர். பண்டிதமணி தோற்றி வளர்த்த சபையிற் புலமை பெற்ற மாணவர் ; காப்பிய நாயகனை நேரிற் கண்டும் கேட்டும் தொழுதவர் , தமிழின் புறந்தொழாத் தன்மானக் கவிஞர் ; காப்பியம் பாடிப் பழுத்த முதுபுலவர். அத்தகு கவியரசை வேண்டினேன். தமிழன்னைக்கு ஊன்றுகோல் வடித்துத் தந்தார்.