பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழக்காடு காதை


மேடைகளில் துணிந்தேறி முழக்கிவரும்
வீமகவி பேச்சிற் காணும்
சோடைகளை இதழ்களிலே எடுத்தெழுதிச்
சொத்தையெனச் சுட்டிக்காட்டப்
பாடுவதைக் கண்டஞ்சி வந்தோரும்
பதரிதுவென் றுணர்ந்து கொண்டார்
கூடிவருஞ் செல்வமுடன் செல்வாக்குங்
குறைந்தனவே வீம ருக்கு.
15
‘என்கவியில் என்பேச்சில் குறைதேடி
எழுதியதால் நாடி வந்த
என்வருவாய் நன்மானம் இழந்தே’னென்
றொருவழக்குத் தொடர்ந்தா ராகத்
தென்மொழியும் ஆங்கிலமுந் தேர்ந்துணர்ந்த
வழக்குரைஞர் யாரோ என்று
நன்மணியார் தஞ்சார்பில் வழக்காடும்
நல்லவரைத் தேடி வந்தார்.
16
நற்றமிழில் வல்லவராய் வழக்குரைக்கும்
நாவலராய்ச் சிங்கம் என்று
பற்றுடனே சொலநிற்கும் பசுமலையார்
பாரதியார் இவர்க்கு வந்தார்;
சொற்றவறும் வீமகவி இடுவழக்கில்
தோற்றோடச் செய்து விட்டார்;
அற்றைமுதல் இவ்விருவர் [1] நண்பானார்
அந்நண்பர் [2] பகைவ ரானார்.
17


  1. இருவர்-பண்டிதமணியும் பாரதியும்
  2. அந்நண்பர்-வீமகவி