பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சொல்வல்ல காதை ௬௭


தென்மொழியும் வடமொழியும் தேர்ந்த நெஞ்சர்;
தெளிவுபெற இருமொழியின் நூல்க ளெல்லாம்
அன்புறவே கற்றுணர்ந்து சுவைக்குஞ் செல்வர்;
ஆய்ந்தறியும் கூர்மதியர்; தெளிந்த சொல்லர்;
தென்பொதியத் தென்றலென மெல்லப் பேசித்
தெரிந்தவையின் நிலைக்கேற்பக் கொள்ளும் வண்ணம்
சின்மொழியால் விளக்கிடுவார் மகிழவைப்பார்
செப்பரிய திறத்ததுவாம் மணியார் பேச்சு! 3

நூலுக்குள் அவர்நுழைந்து திளைத்து வந்து
நுவலுங்காற் சொல்லுக்குச் சொல்லி னிக்கும்
பாலுக்குள் மறைந்திருக்கும் நெய்யைப் போலப்
பாட்டுக்குட் புதைந்திருக்கும் நயங்க ளெல்லாம்
மேலுக்கு வந்தின்பம் நல்கும் வண்ணம்
மேடையிலே சொன்மழையைப் பொழிந்தி ருப்பார்
தாலுக்குள் தமிழ் எழிலின் நடனங் கண்டு
தமைமறந்து செவிமடுப்பர் அவையோர் நன்றே. 4

பல்வரிசை யில்லாத வாய்ம லர்ந்து
பாட்டுரைத்துப் பொருளுரைத்து நயமு ரைக்கும்
சொல்வரிசை, நூலுக்குள் தோய்ந்து தோய்ந்து
சுடர்விடும்நற் றமிழ்ப்புலமைப் பெருக்கைக் காட்டும்;
சொல்லியநல் வாயிதழில் தவழ்ந்து மின்னித்
தொடர்ந்திருக்கும் புன்னகைதான், பாட்ட ணங்கின்
மெல்லியநல் லிதழ்சுவைத்துச் சுவைத்துக் கண்ட
மேலான இன்பத்தின் களிப்பைக் காட்டும். 5