பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௬௮

ஊன்றுகோல்


சிரிப்பிருக்கும் அவர்வாயில்; பேசுங் காலை
சிந்தனையின் தெளிவிருக்கும் அவர்மு கத்தில்;
விரித்திருக்கும் ஒளியிருக்கும் விழியி ரண்டில்;
விரிநெற்றி பொலிவுபெற நீறி ருக்கும்;
பருத்திருக்கும் கழியினைக்கை பிடித்தி ருக்கும்;
பளபளக்கும் அக்கழியில் பூணி ருக்கும்;
விரித்திருக்கும் நீள்விரிப்பில் அமர்ந்தி ருப்போர்
விழிகளுக்குள் வியப்பிருக்கும் களிப்பி ருக்கும். 6

பொன்விசிறி மடிப்பொன்று தோளின் மீது
புரண்டிருக்கும்; வடமொழியும் பயின்றா ரேனும்
மின்முகிலிற் பொழியுங்கால் அயன்மொ ழிச்சொல்
மேவாத தமிழிருக்கும்; பிறர்க ருத்தை
முன்னியல்பின் எள்ளலொடு மறுக்குங் காலை
முனை மழுங்காக் கூர்ப்பிருக்கும்; இனித மர்ந்து
நன்மணியார் நிற்காது பேசு கின்ற
நாவன்மை கண்டுலகம் போற்றி நிற்கும். 7

தங்குதடை யின்றியவர் பேசுங் காட்சி
தமிழ்பயிலும் அந்நாளிற் கண்ட துண்டு
பொங்குநரை முதுமையொடு பெற்ற பின்பும்
புதுமையுடன் பசுமையுடன் எமது ளத்தில்
தங்கிஎமை மகிழ்வுறுத்தும் வழியுங் காட்டும்;
தணியாத தமிழ்க்காதல் ஊட்டி நிற்கும்;
சங்கத்துப் பாடலுக்கு நயங்கள் சொல்வார்
அடடாஅச் சான்றேரர்போல் யாரு ரைப்பார்? 8