பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்வல்ல காதை


அவையறிந்து பேசுங்கால் பொருள்வி ளங்க
அளப்பரிய உவமைகளை வழங்கி நிற்பார்;
சுவைபெருக இரண்டுபொருள் கொள்ளும் சொல்லைச்
சொலிமகிழ்ந்து மகிழ்வளிப்பார்; அந்தப் பேச்சில்
எவர்மனமும் இசைந்திருக்கும்; மறுப்பி ருக்கும்;
இனிப்பிருக்கும்; எள்ளலுடன் கலந்தி ருக்கும்;
அவர்பேச்சில் தமிழ்மொழியின் மணமி ருக்கும்;
அவர்மூச்சில் இலக்கியத்தின் நயமி ருக்கும்.
15
பாட்டுக்கு நயமுரைக்குந் திறமே யன்றிப்
பழையபரி மேலழகன் உரைக்குங் கூடக்
கேட்டுவக்க நயமுரைக்குந் திறமை கொண்டார்;
கிளர்ச்சிதரும் இவர்பேச்சைச் சுவைத்து ணர்ந்து
கூட்டெழுந்த வேட்கையினால் அரங்கந் தோறும்
கொலுவிருந்து தலைமையுரை நல்கும் வண்ணம்
நாட்டவர்தாம் நிரல்படவே வேண்டி நிற்பர்;
நாளெல்லாம் புகழ்பரப்பும் தலைமைப் பேச்சு.
16
கதிரேசர் தலைவரெனுஞ் சொல்லைக் கேட்டால்
கற்றவரும் பேசுதற்குத் தயங்கி நிற்பர்;
மதிவாணர் பேசுங்கால் தவறு காணின்
மறுப்புரைக்கக் கண்ணோட்டஞ் சிறிதுங் காட்டார்;
அதனாலே எழுவாரை மட்டந் தட்டல்
அவர்கொள்கை எனக்கருதல் வேண்டா; பேச்சில்
எதுவேனுங் குறைநேரின் தமிழுக் கன்றோ
இழிவுவரும் எனுங்கருத்தால் மறுப்பு ரைப்பார்.
17