பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நட்புவளர் காதை

அடு


சங்கரனார் உமையவளைக் குமரன் என்னும்
தம்மகனை உடனழைத்து மதுரை மூதூர்ப்
பொங்குதமிழ்ச் சுவைமாந்தும் வேட்கை பூண்டு
பூதலத்து மாந்தரென இறங்கி வந்தார்;
எங்கள் தமிழ்க்-குருபரனார் இந்த வண்ணம்
இனியதமிழ்ப் பெருமையினை இயம்பு கின்றார்;
இங்கரனார் அடிபரவும் அடிகள் தாமும்
இறங்கிவரல் முறைதானே தமிழைக் காண.

7



சமயத்துத் துறையிலவர் தலைமை பூண்டார்
தமிழ்த்துறையில் மணிப்புலவர் தலைமை பூண்டார்;
இமயத்துப் புகழ்முடியில் நிற்கும் அந்த
இருதலைவர் தலைக்கூடி மகிழ்ந்த அந்த
அமையத்துத் தலைமையெலாம் மறந்து போனார்
அடியவர்க்குள் அடியவராய்த் திளைத்தி ருந்தார்;
இமைமுற்றும் விழிமலர்கள் பனிப்ப நின்றார்
எழுமன்புக் கடைக்குந் தாழ் இல்லை யன்றே?

8



ஆன்றமைந்து தலைமைபெறும் பெரியார் தம்முள்
ஆணவமோ தலைச்செருக்கோ அரும்பா தன்றே?
சான்றவர்கள் தலைக்கூடும் பொழுது தம்முள்
தலைவணங்கி மற்றவரை மதித்து நிற்பர்;
ஏன்ற பிற தகுதியெலாம் மறைந்து நிற்கும்
ஈருளத்தும் எழுமுணர்ச்சி ஒன்றே நிற்கும்;
போன்றவரில் லாத்தலைவன் தலைவி கூடும்
பொழுதத்துப் பிறமறைந்தன் பொன்றே தோன்றும்.

9